Published : 12 Mar 2019 09:30 AM
Last Updated : 12 Mar 2019 09:30 AM

டெல்லியில் நடந்த விழாவில் பங்காரு அடிகளார், பிரபுதேவாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கினார் குடியரசுத் தலைவர்

பங்காரு அடிகளார், நடிகர் பிரபுதேவா, நடிகர் மோகன் லால், சங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி உட்பட 47 பேருக்கு பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி னார்.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த ஜனவரி மாதம் 25-ம் தேதி அறிவிக்கப்பட்டன.

தமிழகத்தைச் சேர்ந்த பங்காரு அடிகளார், டிரம்ஸ் சிவமணி, நடிகரும் நடனக் கலைஞருமான பிரபுதேவா,பாடகர் சங்கர் மகாதேவன், மதுரை சின்னப்பிள்ளை, பரதநாட்டியக் கலைஞர் நர்த்தகி நடராஜ், மலையாள நடிகர் மோகன்லால் உட்பட மொத்தம் 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. பத்ம விபூஷண் விருதுக்கு 4 பேரும், பத்ம பூஷண் விருதுக்கு 14 பேரும், பத்ம ஸ்ரீ விருதுக்கு 94 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.

டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் விருது வழங்கும் விழா நேற்று நடந்தது.முதல் கட்டமாக 47 பேருக்கு நேற்று விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். பங்காரு அடிகளார், பாடகர் சங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, நடிகர் பிரபுதேவா, டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். மலையாள நடிகர் மோகன் லாலுக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. மறைந்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. விருதை அவரது மனைவி பெற்றுக் கொண்டார். முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் மாளிகை யில் நடந்த கோலாகலமான விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், எம்பி.க்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பத்ம விருது பெற்றவர்களில் 47 பேருக்கு மட்டும் நேற்று விருதுகள் வழங்கப்பட்டன. மீதியுள்ளவர்களுக்கு வரும் 16-ம் தேதி நடக்கும் விழாவில் விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x