Published : 07 Mar 2019 02:44 PM
Last Updated : 07 Mar 2019 02:44 PM

பொது நிகழ்ச்சியில் ஷூவால் தாக்கிய விவகாரம்: சொந்த கட்சி எம்.பி.யை கண்டித்து பாஜக எம்எல்ஏ போராட்டம்

உத்தர பிரதேசத்தில்,திட்ட அடிக்கல்லில் பெயர் போடுவதில் ஏற்பட்ட தகராறில் பாஜக எம்எல்ஏவை அதேகட்சியைச் சேர்ந்த எம்.பி ஷூவால் தாக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி எம்எல்ஏ போராட்டம் நடத்தி வருகிறார்.

உத்தரபிரதேச மாநிலம் சாந்த் கபீர்நகர் தொகுதி எம்.பி.யாக இருப்பவர் பாஜகவைச் சேர்ந்த சரத் திரிபாதி. இதே சாந்த் கபீர் நகர் சட்டப்பேரவைத் தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் ராகேஷ் சிங் பாகேல். இந்நிலையில் சாந்த் கபீர் நகர் பகுதியில் நேற்று காலை நலத்திட்ட உதவி வழங்குதல் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சரத் திரிபாதி, ராகேஷ் சிங் பாகேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது தொகுதியில் போடப்பட்டுள்ள சாலைத் திட்டம் தொடர்பான அடிக்கல்லில் பெயர் இடம்பெறுவது தொடர்பாக சரத் திரிபாதி, ராகேஷ் சிங் ஆகியோர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் கோபமடைந்த சரத் திரிபாதி, தனது ஷூவைக் கழற்றி ராகேஷ் சிங்கை சரமாரியாக அடித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ராகேஷ் சிங், பதிலுக்கு சரத் திரிபாதியை கையால் தாக்கினார். இதையடுத்து போலீஸார் ஓடிவந்து இருவரையும் பிரித்து வைத்து அனுப்பினர். பாஜக எம்எல்ஏவை அதே கட்சியைச் சேர்ந்த எம்.பி ஒருவர் ஷூவால் அடித்த வீடியோ தற்போது வைரலானது.

இந்தநிலையில் எம்.பி சரத் திரிபாதி மீது நடவடிக்கை எடுக்கோரி சாந்த் கபீர் தொகுதியில் எம்எல்ஏ ராகேஷ் சிங் உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார். அவரது ஆதரவாளர்களும் பெருமளவில் கூடினர். ஆனால் போலீஸார் லேசான தடியடி நடத்தி அவர்களை அங்கிருந்து விரட்டினர். சரத் திரிபாதி மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என ராகேஷ் சிங் அறிவித்துள்ளார்.

இதனிடையே அவர்கள் இருவரையும் லக்னோ வருமாறு உ.பி. மாநில பாஜக தலைவர் எம்.என்.பாண்டே அழைப்பு விடுத்துள்ளார். அப்போது விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x