Published : 15 Mar 2019 06:20 PM
Last Updated : 15 Mar 2019 06:20 PM

ஆந்திராவில் திடீர் திருப்பம்: பாஜகவை கைவிட்டு மாயாவதியுடன் கைகோர்த்தார் பவன் கல்யாண்

ஆந்திராவில் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனாவுடன், பாஜக தலைவர்கள் கூட்டணி அமைக்க விரும்பிய நிலையில், அவர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பிஹாரில், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளத்துடனும், மகாராஷ்டிராவில் சிவசேனாவுடனும், தமிழகத்தில் அதிமுகவுடனும் பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளது. இதுமட்டுமின்றி அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. தென் மாநிலங்களான கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் கூட்டணி அமைக்கும் முயற்சியில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

ஆந்திர மாநிலத்தில் தற்போது ஆளும் கட்சியான சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டது. எதிர்க்கட்சியான ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தனித்து போட்டியிடும் முடிவில் உள்ளது.

நடிகர் பவன் கல்யாண் தலைமையிலான ஜன சேனா கட்சியுடன் கூட்டணி அமைக்க பாஜகவினர் முயன்றனர். மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறுவதால் பவன் கல்யானை முதல்வர் வேட்பாளராக முன்மொழியவும் பாஜக தயாராக இருந்தது.

இந்தநிலையில், மக்களவைத் தேர்தலில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மாயாவதியின் பகுஜன் சமாஜ், பவன் கல்யாணின் ஜன சேனா கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

லக்னோவில் இரு கட்சி தலைவர்களும் இன்று செய்தியாளர்களின் கூட்டாக இதனை அறிவித்தனர். அப்போது மாயாவதி கூறுகையில், ‘‘பகுஜன் சமாஜ் கட்சியும், ஜன சேனா கட்சியும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. தொகுதி ஒதுக்கீடுகள் இறுதி நிலையை அடைந்துள்ளன. ஆந்திராவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் கூட்டணியாக இருகட்சிகளும் களம் இறங்கும். பவன் கல்யாண் ஆந்திர முதல்வராக வேண்டும் என்பதே எனது விருப்பம்’’ என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x