Published : 02 Mar 2019 11:49 AM
Last Updated : 02 Mar 2019 11:49 AM

அபிநந்தனின் ஒப்பற்ற தைரியத்தால் தேசமே பெருமை கொள்கிறது: மோடி புகழாரம்

அபிநந்தனின் ஒப்பற்ற தைரியத்தால் தேசமே பெருமை கொள்கிறது என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தன்  நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணியளவில் ராவல் பிண்டி ராணுவ தலைமையகத்தில் விடுதலை செய்யப் பட்டார். அங்கிருந்து அவர் லாகூருக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் சாலை மார்க்கமாக பாகிஸ்தானின் வாகா எல்லைக்கு நேற்று மாலை 5 மணி அளவில் அபிநந்தன் வந்தார். இந்திய தூதரக அதிகாரிகளும் அவருடன் இருந்தனர்.

பஞ்சாப் மாநிலம், வாகா-அட்டாரி எல்லை வழியாக நேற்றிரவு அவர் நாடு திரும்பினார். விமானப் படையின் உயரதிகாரிகளான ஏர் வைஸ் மார்ஷல்கள் பிரபாகரன், ரவி கபூர் ஆகியோர் அபிநந்தனை வரவேற்றனர். அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அட்டாரி எல்லைக்கு அபிநந்தன் வந்தபோது ஆயிரக்கணக்கான மக்கள் ஆரவாரம் செய்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரது விடுதலையைக் காலை முதலே பொதுமக்கள் ஆடல், பாடலுடன் கொண்டாடினர். இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர். அவரது புகைப்படத்துக்கு பாலாபிஷேகமும் செய்தனர்.

இந்நிலையில் அபிநந்தனின் விடுதலையைப் பாராட்டி பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ''வீடு திரும்பிய விங் கமாண்டர் அபிநந்தனை வரவேற்கிறேன். உங்களின் ஒப்பற்ற தைரியத்தால் தேசமே பெருமை கொள்கிறது. நம்முடைய ராணுவப் படைகள் 130 கோடி இந்தியர்களுக்கு உத்வேகம் அளிக்கின்றன. வந்தே மாதரம்'' என்று தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்ட வாழ்த்துப் பதிவில், ''அபிநந்தன் வர்த்தமானை வரவேற்கிறேன். உங்களின் தைரியம், கடமை உணர்வு எல்லாவற்றுக்கும் மேலாக உங்களின் கண்ணியத்தால் இந்தியா பெருமைப்படுகிறது. நீங்களும் ஒட்டுமொத்த விமானப் படையும் வருங்காலத்தில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x