Last Updated : 29 Mar, 2019 12:39 PM

 

Published : 29 Mar 2019 12:39 PM
Last Updated : 29 Mar 2019 12:39 PM

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முழுமையாக அனுமதி இலவசம்: ராகுல் காந்தி அதிரடி

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், தொழில் துறையில் தடை, தாமதங்கள் அனைத்தையும் ரத்து செய்து, புதிதாகத் தொழில் தொடங்கும் நிறுவனங்கள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அரசிடம் இருந்து எந்த ஒரு அனுமதியும் பெறாமல் தொழில் நடத்த அனுமதிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய தொழில் நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டு வரும் ஏஞ்சல் டேக்ஸ் ரத்து செய்யப்பட்டு, வங்கியில் கடன் கிடைப்பது எளிதாக்கப்படும் என்று ராகுல் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலுக்காக வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு நேற்று  பிரத்யேகப் பேட்டி அளித்தார். அதில் காங்கிரஸ் ஆட்சியில் செய்யப்பட உள்ள தொழில்துறை சீர்திருத்தங்கள் குறித்து விவரித்தார்.

ராகுல் காந்தி பேசியதாவது:

''காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் அதிகமான முன்னுரிமை அளிக்கப்படும். புதிதாகத் தொழில் தொடங்கும் தொழில் முனைவோர்களுக்கு நிதியுதவியும், வங்கியில் எளிதாகக் கடன் வசதியும், வரிச்சலுகையும் அளிக்கப்படும். அதன் மூலம் அவர்கள் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை அதிகப்படுத்துவோம்.

நாட்டில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கும்போது, அரசிடம் இருந்து எந்தவிதமான அனுமதிக்கும் காத்திருக்கத் தேவையில்லை. ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்க அனுமதி கிடைத்துவிட்டால், அடுத்த 3 ஆண்டுகளுக்கு அரசிடம் இருந்து எந்தவிதமான அனுமதியும் பெறமால் எளிதாகத் தொழில் செய்யலாம். எதைப்பற்றியும் கவலைப்படவேண்டாம், தொழில் தொடங்கிவிட்டால், நிம்மதியாகத் தொழிலை மட்டும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு கவனிக்கலாம்.

அதிகாரிகளால் வரும் கெடுபிடிகள், தொந்தரவுகள், கையூட்டு, எந்தவசதிக்கும் அனுமதி கோருதல் போன்றவற்றில் எந்தவிதமான தடையையும், தாமதங்களையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சந்திக்காது. அதற்கு அனுமதியும் பெறத் தேவையில்லை. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் கொடூரமான ஏஞ்சல் வரி நீக்கப்படும். இதற்கு காங்கிரஸ் கட்சி உறுதியளிக்கிறது.

நாட்டின் தொழில்முனைவோர்களுடன் நான் ஆலோசித்தபோது புதிதாக ஒரு ஆலோசனையும் முன்வைக்கப்பட்டது. அதன்படி, இளம் தொழில் முனைவோர்களுக்கு வங்கி கடன் வசதியை அளித்து, அவர்களைத் தொழிலில் ஆர்வத்துடன் ஈடுபட வைப்பது.

நிரவ் மோடிக்கு மட்டும் ஆயிரக்கணக்கான கோடிக்கணக்கில் கடன் ஏன் கொடுக்க வேண்டும்? அவர் எத்தனை ஆயிரம் வேலைவாய்ப்புகளை இந்தியாவில் உருவாக்கினார். நிரவ் மோடிக்கு கடன் வழங்கும்போது, இளம் தொழில்முனைவோருக்கு கடன் வழங்கினால், அவரால் 2 ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்க முடியாதா?

ஒரு தொழில்முனைவோர் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியும் என்பதை அடிப்படையாக வைத்து அவருக்கு வரிச்சலுகை, வங்கிக் கடன் வசதி, ஊக்கச் சலுகை போன்றவை அரசின் சார்பில் வழங்கப்படும். எங்களின் விரிவான தேர்தல் அறிக்கை வரும் வாரத்தில் வெளியிடப்படும்''.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவராக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 6 மாதங்களுக்கும் நாடு முழுவதும் மேலாக 150-க்கும் மேற்பட்ட இடங்களுக்குச் சென்று பல்வேறு தரப்பட்டவர்கள், தொழில் முனைவோர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், பொருளாதார வல்லுநர்கள் உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்தி தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x