Last Updated : 20 Mar, 2019 02:46 PM

 

Published : 20 Mar 2019 02:46 PM
Last Updated : 20 Mar 2019 02:46 PM

கோவாவில் மீண்டும் பாஜக ஆட்சி: சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்து கண்ணீர் விட்டு அழுதார் முதல்வர் பிரமோத் சாவந்த்

கோவா சட்டப்பேரவையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், பாஜக தலைமையிலான தனது அரசின் பலத்தை முதல்வர் பிரமோத் சாவந்த் நிரூபித்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் 20 எம்எல்ஏக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 15 பேர் எதிராக வாக்களித்தனர்.

கோவா மாநிலத்தில் பாஜக தலைமையில் மகாராஷ்டிரா கோமந்தக் கட்சி, கோவா பார்வேர்டு கட்சி, 3 சுயேட்சைகள் ஆகியோரின் ஆதரவில் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. மனோகர் பாரிக்கர் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். இதைத் தொடர்ந்து யார் முதல்வர் என்று கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே போட்டி ஏற்பட்டதால், மாநில அரசியலில் குழப்பமான சூழல் நிலவியது.

இதையடுத்து, டெல்லியில் இருந்து வந்த மூத்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, கூட்டணிக் கட்சிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கோமந்தக் கட்சியும், கோவா பார்வேர்டு கட்சியும் முதல்வர் பதவியைக் கோரின. இதனியைடேயே நீண்ட பேச்சுக்குப் பின், இரு கட்சியின் தலைவர்களுக்கும் துணை முதல்வர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி நேற்று அதிகாலை 2 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் மிருதுளா சென் முதல்வர் பிரமோத் சாவந்துக்கும், துணை முதல்வர்களாக மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சியின் தலைவர் சுதின் என்ற ராமகிருஷ்ண தாவில்கர், கோவா பார்வேர்ட் கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாய் ஆகியோர் பதவியேற்றனர். இதையடுத்து, பாஜகவின் 11 எம்எல்ஏக்கள், தலா 3 எம்எல்ஏக்கள் கொண்ட ஜிஎப்பி, எம்ஜிபி, சுயேட்சைகள் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்துள்ளது.

இந்நிலையில் சட்டப்பேரவையில் இன்று பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முதல்வர் பிரமோத் சாவந்த்துக்கு, ஆளுநர் மிருதுளா சென் உத்தரவிட்டிருந்தார். அதன்படி கோவா சட்டப்பேரவையை ஆளுநர் மிருதுளா சென் கூட்டினார்.

துணை சபாநாயகர் மைக்கேல் லோபா தலைமையில் அவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் முதல்வர் பிரமோத் சாவந்த் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி தீரமானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் 14 எம்எல்ஏக்கள், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு எம்எல்ஏ என மொத்தம் 15 பேர் எதிராக வாக்களித்தனர்.

அதேசமயம். பாஜக எம்எல்ஏக்கள் 11 பேர் , மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி, கோவா பார்வேர்ட் கட்சியின் சார்பில் தலா 3 எம்எல்ஏக்கள், சுயேட்சை எம்எல்ஏக்கள் 3 பேர் என மொத்தம் 20 பேர் ஆளும் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் மைக்கேல் லோபா அறிவித்தார். அப்போது பேசிய முதல்வர் பிரமோத் சாவந்த்,  மறைந்த முதல்வர் மனோகர் பாரிக்கரை நினைத்து கண்ணீர் விட்டார்.

அவர் பேசுகையில், "நான் இங்கு எம்எல்ஏவாக இருப்பதற்கும், இந்த இடத்துக்கு வந்தமைக்கும் மனோகர் பாரிக்கர்தான் காரணம்.(கண்ணீர் விட்டு அழுதார்)  மாநிலத்தின் வளர்ச்சிக்கு அனைத்து எம்எல்ஏக்களும் இணைந்து பணியாற்ற வேண்டும். வளர்ச்சிப் பணிகள் மாநிலத்தின் அனைத்து இடங்களுக்கும் செல்ல உதவ வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

பாஜக சட்டப்பேரவைத் தலைவர் மவின் கோதின்ஹோ பேசுகையில், "மனோகர் பாரிக்கர் எங்களைப் பொறுத்தவரை மிகப்பெரிய தலைவர். இனிமேல் மாநிலத்தில் மனோகர் பாரிக்கர் போன்ற தலைவரை இனி பார்க்க முடியாது. கோவா மாநிலத்தை சிறப்பாக கட்டமைத்து, நிர்வாகத்தை சீரிய முறையில் பாரிக்கர் கொண்டு சென்றார். நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பு வகித்து, துல்லியத் தாக்குதலையும் வெற்றிகரமாக நடத்தியவர்" எனப் புகழாரம் சூட்டினார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ சர்ச்சில் அலிமோ பேசுகையில், "மனோகர் பாரிக்கர் சிறந்த போராளி. கணையப் புற்றுநோய் வந்தவுடன் ஏறக்குறைய ஒரு ஆண்டு புற்றுநோயுடன் போராடியுள்ளார். மாநிலத்தில் காளை சண்டையை நடத்த உயர் நீதிமன்றம் தடை செய்த நிலையில் தடை விலக்கி மீண்டும் மக்களுக்கு உரிமையை பெற்றுக்கொடுத்தவர் பாரிக்கர்" எனப் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x