Published : 02 Mar 2019 02:27 PM
Last Updated : 02 Mar 2019 02:27 PM

டெல்லியில் திடீர் திருப்பம்: ஆம் ஆத்மி தனித்துப்போட்டி; அதிரடியாக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

டெல்லியில் காங்கிரஸூடன் கூட்டணி அமைக்க முயன்று வந்த ஆம் ஆத்மி கட்சி திடீரென தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. அக்கட்சியின் சார்பில் டெல்லியில் போட்டியிடும் 6 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸுடன், தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைக்கும் முயற்சியில் தோல்வியைச் சந்தித்திருக்கிறது ஆம் ஆத்மி கட்சி.

பாஜகவையும் மோடியையும் எதிர்கொள்ள வலுவான கூட்டணி என்பதால் காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கருதிய ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால், அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

ஆனால் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக அஜய் மக்கான் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கட்சி தலைமைக்கு கடும் நெருக்கடி கொடுத்து வந்தனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமரசம் செய்ய முற்பட்டபோதிலும், ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

இதையடுத்து, காங்கிரஸ் தரப்பு கைவிரித்துவிட்டதைத் தொடர்ந்து டெல்லியின் ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுவது என கேஜ்ரிவால் முடிவெடுத்தார். ஏழு தொகுதிகளிலும் கிடைக்கும் வெற்றி, டெல்லிக்கு மாநில அந்தஸ்து பெறுவதில் பெருமளவில் கைகொடுக்கும் என்பதால் தனித்து போட்டியிட தீர்மானித்தார்.

எனினும், இருகட்சிகளிடையே சமரசம் செய்யும் முயற்சிகள் நடந்து வந்தன. இந்தநிலையில் ஆம் ஆத்மி கட்சி திடீரென மக்களவைத் தேர்தலில் டெல்லியில் போட்டியிடும் வேட்பாளர்களை திடீரென இன்று அறிவித்தது. அதன்படி, கிழக்கு டெல்லியில் அத்தீஷ், தெற்கு டெல்லியில் ராகவ் சத்தா, சாந்தினி சவுக்கில் பங்கஜ் குப்தா, வடகிழக்கு டெல்லியில் திலிப் பாண்டே, வடமேற்கு டெல்லியில் ககன் சிங், புதுடெல்லியில் பிரிஜேஷ் கோயல் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 7 தொகுதிகளில் கொண்ட டெல்லியில் மேற்கு டெல்லி தொகுதிக்கு மட்டுமே ஆம் ஆத்மி கட்சி வேடபாளரை அறிவிக்கவில்லை. அந்த தொகுதி வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க மறுக்கும் விஷயத்தில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் வித்தியாசமில்லை எனும் விமர்சனத்தையும் முன்வைத்து தேர்தலை சந்திக்கவுள்ளது ஆம் ஆத்மி கட்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x