Last Updated : 14 Mar, 2019 08:57 AM

 

Published : 14 Mar 2019 08:57 AM
Last Updated : 14 Mar 2019 08:57 AM

மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் 20, மஜத 8 தொகுதிகளில் போட்டி: பாஜக தனித்து களம் காண்கிறது

மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கட்சிகளிடையே தொகுதி உடன்பாடுஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் 20 தொகுதிகளிலும், மஜத 8தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 28 தொகுதிகளிலும் பாஜக தனித்து களம் காண்கிறது.

கர்நாடகாவில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் பாஜகஆட்சிக்கு வருவதை தடுக்கும் வகையில் காங்கிரஸ் - மஜத கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தன. இதையடுத்து மக்களவைத் தேர்தலிலும் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது.

கடந்த ஜனவரியில் மஜத மாநில தலைவர் விஷ்வநாத், காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்துதொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 3 கட்ட பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படாததால் கடந்த மாதம் காங்கிரஸ் தேசிய செயலாளர் கே.சி.வேணுகோபாலை முதல்வர் குமாரசாமி சந்தித்துப் பேசினார். அப்போது மஜத தரப்பில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 12 தொகுதிகள் கோரப்பட்டன. அதை ஏற்க மறுத்த காங்கிரஸ், 6 தொகுதிகளே ஒதுக்கமுடியும் என தெரிவித்தது.

இதையடுத்து மஜத தேசியதலைவர் தேவகவுடா, டெல்லியில்காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து 10 தொகுதிகள் ஒதுக்குமாறு கோரினார். அதற்கும் காங்கிரஸ் மறுத்தநிலையில் நேற்று மஜத தேசிய பொதுச்செயலாளர் டேனிஷ் அலி, ராகுல் காந்தியை கேரள மாநிலம் கொச்சியில் சந்தித்துப் பேசினார். அப்போது மஜதவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, உடன்பாடு கையெழுத்தானது.

இதுகுறித்து காங்கிரஸ் தேசியசெயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மஜதவுக்கு ஹாசன், மண்டியா, துமக்கூரு, ஷிமோகா உள்ளிட்ட 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிக்கோடி, பீதர், குல்பர்கா, கோலார் உள்ளிட்ட 20 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பாஜக 28தொகுதிகளிலும் தனித்து களம்காண்கிறது. இதனால் கர்நாடகாவில் இருமுனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x