Published : 09 Mar 2019 11:10 AM
Last Updated : 09 Mar 2019 11:10 AM

காஷ்மீரி சகோதரர்களைத் தாக்கியவர்கள் பித்தர்கள்: மோடி கண்டனம்

லக்னோவில் காஷ்மீர் சகோதரர்களைத் தாக்கியவர்களை மனநோயாளிகள் என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

 

உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் தாலிகஞ்ச் பகுதியில் இரு காஷ்மீர் இளைஞர்கள் தாலிகஞ்ச் பாலத்தின் அருகே பழங்களை  விற்றுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காவி உடை அணிந்த கும்பல், இருவரையும் தங்கள் கையிலிருந்த கம்பால் கடுமையாக தாக்கியது. இச்சம்பவத்தை நேரில் பார்த்த உள்ளூர்வாசிகள் சிலர் தாக்குதலிலிருந்து இளைஞர்களை மீட்டு பின்னர் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

 

இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான பஜ்ரஞ்ச் சோங்கர் என்பவர் உள்ளிட்ட நால்வர்  கைது செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீர் வியாபாரிகள் தாக்கப்படும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்தச் சம்பவத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் கான்பூரில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய மோடி, ''உத்தரப் பிரதேசத்தில் காஷ்மீரி சகோதரர்களைத் தாக்கியவர்கள் பித்தர்களாகத்தான் இருக்க வேண்டும். அவர்களை உடனடியாகக் கைது செய்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தைப் பாராட்டுகிறேன். இதேபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது மற்ற மாநிலங்களும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

தீவிரவாதத்தை வேரோடு அழிக்க வேண்டுமெனில் நாம் ஒற்றுமையாக இருப்பது அவசியம். ஆனால் இந்தியாவில் இருக்கும் சிலரே பாகிஸ்தானுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

 

அவர்களின் சுயநல அரசியலாலும், வேண்டுமென்றே திணிக்கப்படும் கருத்துகளாலும் தீவிரவாதிகளே பயன்பெறுகிறார்கள். அரசின் மீது அவர்கள் சுமத்தும் அபாண்டக் குற்றச்சாட்டுகள் மூலம் நாட்டின் எதிரிகளை வலிமை ஆக்குகின்றனர்'' என்றார் மோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x