Last Updated : 09 Mar, 2019 03:09 PM

 

Published : 09 Mar 2019 03:09 PM
Last Updated : 09 Mar 2019 03:09 PM

ஃபேஸ்புக் விளம்பரத்துக்கு செலவு: டாப் 50 இடங்களில் ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு

கடந்த ஒரு மாதத்தில், ஃபேஸ்புக்கில் அரசியல் விளம்பரங்களுக்கு அதிகமாக செலவழித்த 50 பேரின் பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

சமூக வலைதளங்கள் வாயிலாக அரசியல் கட்சிகளும் அரசியல் பிரமுகர்களும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஃபேஸ்புக் மூலம் செய்யப்படும் அரசியல் பிரச்சாரங்கள் மக்கள் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளதால் இதில் செலவு செய்ய கட்சிகள் தயங்குவது இல்லை.

ஆனால், அமெரிக்க அதிபர் தேர்தலின்போது கேம்ப்ரிட்ஜ் அனலிடிக்கா நிறுவனம் ஃபேஸ்புக் பயனாளர்கள் தகவலை திருடி அதிபர் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக எழுந்த புகாரின் காரணமாக ஃபேஸ்புக் நிறுவனம், தனது தளத்தில் வெளியாகும் அரசியல் விளம்பரங்கள் தொடர்பாக வெளிப்படைத்தன்மையை நிரூபிக்கும் வகையில் ஒரு தரவுப்பெட்டகத்தை உருவாக்கியுள்ளது.

ஆட் லைப்ரரி (Ad Library) என்ற அந்த வசதியின் மூலம் விளம்பரங்களுக்கு யார் அதிகம் செலவு செய்கிறார்கள். அவர்களின் இலக்கு யார், அந்த விளம்பரம் எத்தனை பேரை சென்று சேர்ந்துள்ளது, எவ்வளவு செலவழிக்கப்பட்டது போன்ற தகவல்களைப் பெறலாம்.

அந்த வகையில், சில முக்கிய பிரபலங்கள் ஃபேஸ்புக் விளம்பரத்துக்காக எவ்வளவு செலவழிக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

பிப்ரவரி 1 முதல் மார்ச் 2 வரையிலான காலகட்டத்தில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி 27-வது இடத்திலும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 44-வது இடத்திலும் உள்ளனர்.

ஜெகன்மோகன் ரெட்டி, 25 விளம்பரங்களுக்கு ₹1,79,682 செலவு செய்திருக்கிறார். சந்திரபாபு நாயுடு 13 விளம்பரங்களுக்காக ₹90,975 செலவு செய்துள்ளார். ஆனால், இரண்டு தலைவர்களுமே தங்கள் விளம்பரங்களுக்கு யார் செலவு செய்தார்கள் என்ற விவரத்தைத் தெரிவிக்கவில்லை.

ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியின் அங்கமான இந்தியன் பொலிடிக்கல் ஆக்‌ஷன் கமிட்டி  (I-PAC) கட்சியை டிஜிட்டல் தளங்களில் பிரபலப்படுத்தும் பணியில் உள்ளது. ஐ-பேக் மட்டும் ஃபேஸ்புக் விளம்பரத்துக்காக  ₹53,392 செலவழித்துள்ளது. ஆந்திர பாஜக ₹53,392 செலவழித்திருக்கிறது. தெலுங்கு தேசம் கட்சி  ₹35,867 செலவழித்திருக்கிறது. ஆந்திர ஐடி அமைச்சர் நரா லோகேஷ், ₹39,288 செலவழித்திருக்கிறார். ஆந்திர காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்.ரகுவீர ரெட்டி ₹34,051 செலவு செய்துள்ளார்.

மொத்தத்தில் பிப்ரவி 1 முதல் மார்ச் 2 வரையிலான காலகட்டத்தில், 2501 நபர்கள் அரசியல் விளம்பரங்களுக்காக ரூ.4 கோடி செலவழித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x