Published : 11 Mar 2019 01:31 PM
Last Updated : 11 Mar 2019 01:31 PM

உயர் சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு சட்டம் தொடர்பான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற பரிசீலனை: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

பொருளாதாரரீதியாக  பின்தங்கிய உயர் சாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு அளித்து கொண்டுவரப்பட்ட  சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர்சாதியினருக்கு வேலைவாய்ப்பு, கல்வியில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, சட்டமாகியுள்ளது. இந்தச் சட்டத்தின்படி, ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வரை வருமானம் உள்ளோர் இந்த சலுகையை பெற தகுதியானவர்கள். 5 ஏக்கருக்கு அதிகமான விவசாய நிலம் வைத்திருப்போர், ஆயிரம் சதுர அடிக்கு அதிகமான வீட்டில் குடியிருப்போர், நகராட்சி பகுதியில் 100 அடிக்கு அதிகமான இடத்திலும், நகராட்சி இல்லாத இடத்தில் 200 அடிக்கு அதிகமான இடத்திலும் குடியிருப்போர் இந்த சலுகையை பெற இயலாது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்புபடி 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு அளவு செல்லக்கூடாது. ஆனால், ஏற்கனவே இருக்கும் இடஒதுக்கீடு அளவைக் குறைக்காமல், 103-வது சட்டத்திருத்தத்தின் மூலம் இந்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

ஆனால், பொருளாதார ரீதியாக கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது எனத் தெரிவித்து ஆர்வலர் டெஹ்சீன் பூனாவாலா, சமத்துவத்துக்கான இளைஞர் அமைப்பு ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

மேலும், சமத்துவத்துக்கான இளைஞர் அமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் செந்தில் ஜெகதீசன், கோபால் சங்கரநாராயன் ஆகியோர் குறிப்பிடுகையில், இந்திரா சாவ்னே தொடர்பான வழக்கில் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலை என்பதை இடஒதுக்கீடு அளவாக கருத முடியாது என்று தீர்ப்புஅளித்திருந்தனர் என்பதை குறிப்பிட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பூனாவாலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தவான் வாதிடுகையில், " இடஒதுக்கீட்டை 50 சதவீதத்துக்கு மேல் கொண்டு செல்வது அரசமைப்புச் சட்டத்தை மீறியதாகும். சட்டத்திருத்தம் கொண்டு வந்து அரசமைப்பை நீர்த்துப்போகச் செய்கிறார்கள் " என வாதிட்டார்.

 இந்த வாதங்களைக் கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் பிறப்பித்த உத்தரவில் " பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் இருக்கும் உயர் சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை அரசியல் சாசன அமர்வு விசாரிப்பது குறித்து நீதிமன்றம் பரிசீலிக்கும். இதுதொடர்பாக இம்மாதம் 28-ம் தேதி நடைபெறும் அடுத்த விசாரணையில் ஆலோசிக்கப்படும். ஆனால், அதுவரை எந்தவிதமான உத்தரவும் பிறப்பிக்க முடியாது " என நீதிபதி உத்தரவிட்டார்.

கருணாநிதியின் தலைமைப் பண்பில் ஸ்டாலினை பொருத்திப் பார்க்க முடியுமா? - தொல்.திருமாவளவன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x