Published : 22 Mar 2019 07:42 PM
Last Updated : 22 Mar 2019 07:42 PM

‘ஓலா’ கார் சேவையை உடனடியாக ரத்து செய்து கர்நாடக அரசு அதிரடி உத்தரவு

பெங்களூருவில் ஓலா கார் சேவையை உடனடியாக நிறுத்துமாறு கர்நாடக அரசின் போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.  அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக ‘பைக் டாக்ஸி’க்கள் சேவையை நடத்தியதையடுத்து கர்நாடக அரசு இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

 

இது தொடர்பாக கர்நாடக அரசுப் போக்குவரத்துத் துறை மார்ச் 18ம் தேதி வெளியிட்ட உத்தரவில், ஆனி டெக்னாலஜிஸ், ஓலா பெங்களூரு நிறுவனத்துக்கு அளித்த உரிமம் 6 மாத காலத்துக்கு ரத்து செய்யப்படுகிறது என்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

இந்த உத்தரவின் நகல் கையில் கிடைத்த 3 நாட்களுக்குள் ஓலா தனது உரிமத்தை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

 

“மொபைல் ஆப் அடிப்படையிலான கார் சேவைகளை நடத்தவே ஓலாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  ஆனால் அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக பைக் டாக்ஸிக்களை ஓட்டியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இது விதிமுறைகளுக்கு எதிரானது. இது தொடர்பாக கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இது தொடர்பாக ஓலா நிறுவனத்துக்கு அளித்த நோட்டீஸ்களுக்கு அவர்கள் அளித்த பதில்கள் திருப்திகரமாக இல்லை. ஆகவே விதிகளின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று போக்குவரத்து ஆணையர் வி.பி. இக்கெரி தி இந்து ஆங்கிலம் நாளிதழுக்குத் தெரிவித்தார்.

 

இதனையடுத்து 260 இருசக்கர வாகனங்கள் கொட்டடியில் அடைக்கப்பட்டன.

 

மேலும், உத்தரவை மீறி ஓலா டாக்ஸிக்கள் பெங்களூருவில் ஓடினால் நடவடிக்கை மேற்கொள்ள ஆர்டிஓ-வுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

திங்களன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் வெள்ளிக்கிழமையான இன்று வரை ஓலா அங்கு ஓடிக்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x