Last Updated : 08 Mar, 2019 09:24 PM

 

Published : 08 Mar 2019 09:24 PM
Last Updated : 08 Mar 2019 09:24 PM

ரஃபேல் ஒப்பந்த ஆவணங்கள் களவாடப்படவில்லை: அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால்

ரஃபேல் போர் விமான ஒப்பந்த ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து திருடப்படவில்லை,  நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் மனுதாரர்கள் அசல் ஆவணங்களின் போட்டோ காப்பிகளையே பயன்படுத்தினர், இது அரசால் ரகசிய ஆவணங்கள் என்று தரம் பிரிக்கப்பட்டவை என்றுதான் கூறியிருப்பதாகத் திடீரென மாற்றுக் கருத்தைத் தெரிவித்துள்ளார் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால்.

 

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக தி இந்து ஆங்கிலம் நாளிதழில் என்.ராம் கட்டுரை எழுதி வருவதையடுத்து புதனன்று அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து ரஃபேல் ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன என்றும், அரசாங்கம் ரகசியம் என்று தரம்பிரித்து வைத்திருக்கும் ஆவணங்களைப் பொதுவெளியில் வெளியிடுவது சட்ட விரோதம் என்றும் ரகசியக் காப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்குரியது என்றும் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் பிடிஐ-க்கு கேகே வேணுகோபால் கூறிய போது, “பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து ஆவணங்கள் திருடப்பட்டதாக நான் கூறியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர் என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது, அது சரியானது அல்ல. கோப்புகள் திருடப்பட்டன என்ற வாசகம் தவறானது” என்றார்

 

அதாவது, யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, பிரசாந்த் பூஷன் ஆகியோர் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான நீதிமன்றத்தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று செய்திருந்த மனுவில் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக 3 ஆவணங்களை இணைத்திருந்தனர் இது ஒரிஜினல் ஆவணத்தின் நகல்கள் என்றுதான் குறிப்பிட்டிருந்தேன் என்று கேகே வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

 

அதாவது அட்டர்னி ஜெனரல் ‘திருடப்பட்டது’ என்று கூறியது மிகவும் கடுமையான வார்த்தைப் பிரயோகம் அதனை தவிர்த்திருக்கலாம் என்று அதிகாரப் பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

 

அரசும்  தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ்களை அதிகாரப்பூர்வ ரகசியக் காப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x