Last Updated : 25 Mar, 2019 02:08 PM

 

Published : 25 Mar 2019 02:08 PM
Last Updated : 25 Mar 2019 02:08 PM

டெல்லியில் ஆம் ஆத்மி- காங்கிரஸ் கூட்டணி அமையுமா? ராகுல் காந்தியின் முடிவு என்ன?

டெல்லியில் மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியுடன், காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது குறித்து அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இறுதி முடிவை எடுக்கட்டும் என நிர்வாகிகள் தெரிவித்துவிட்டனர்.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக வரும் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி கூட்டணியை உறுதி செய்து, தொகுதிப் பங்கீடு முடிந்து வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.

ஆனால், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது குறித்து கட்சிக்குள் இரு தரப்பினருக்கும் இரு கருத்துகள் நிலவுகின்றன. இரு கட்சிகளுக்கும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான் நிலைப்பாடாக இருந்தாலும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து அரசியல் செய்துதான் ஆம் ஆத்மி கட்சி களத்துக்கு வந்தது.

இந்த முறை டெல்லியில் உள்ள 7 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றவிடக்கூடாது என்ற தீர்மானத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் உள்ளன. கடந்த தேர்தலில் 7 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இதற்காக ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் கட்சியில் ஒருபிரிவினர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதுதான் இப்போது கட்சிக்குள் பிரச்சினையைக் கிளப்பி இருக்கிறது.

எதிர்ப்பும், ஆதரவும்

டெல்லியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் தலைமையிலான ஒருபிரிவினர் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்கக் கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் மற்றொரு பிரிவினர் அதாவது அஜய் மகான், சுபாஷ் சோப்ரா, தாஜ்தர் பாபர், அரவிந்தர் சிங், ஆகியோர் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைக்க ஆதரவு தெரிவிக்கிறார்கள். இதனால் இரு தரப்புக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க விரும்பும் காங்கிரஸ் கட்சியில் ஒருபிரிவினர் டெல்லி மட்டுமல்லாது, ஹரியாணா, பஞ்சாப் மாநிலத்திலும் கூட்டணி அமைத்தால் கணிசமான இடங்களில் வெல்ல முடியும் என்று நம்புகிறார்கள்.

வேட்பாளர்கள் அறிவிப்பு

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிக்குத் தயாராக இருந்த ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், மிகவும் பொறுமையாக இருந்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியின் தரப்பில் இருந்து எந்தவிதமான பதிலும் இல்லை என்பதால், 7 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டார்.

அதைசமயம் காங்கிரஸ் , ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே கூட்டணி அமைய வேண்டும் என்கிற நோக்கில்  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் தூதுவராக கடந்த வாரம் சென்றார். ஆனால், அதற்கும் பலன் கிடைக்கவில்லை.

ஆலோசனைக்கூட்டம்

இதற்கிடைய இன்று ராகுல் காந்தி முன்னிலையில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித், காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் அஜய் மக்கான், சுபாஷ் சோப்ரா, உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினார்கள். அதில், ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைப்பதில் இறுதி முடிவு எடுப்பதை ராகுல் காந்தியிடம் ஒப்படைத்துவிடுவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், "ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணிக்கு ஆதரவாக இருக்கும் 12 மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலரிடம் கடிதம் பெற்று டெல்லி காங்கிரஸ் தலைவர் பி.சி.சாக்கோ தலைமையிடம் அளித்துவிட்டார். விரைவில் ராகுல் காந்தி முடிவு எடுப்பார்" எனத் தெரிவித்தனர்.

இதற்கிடையே டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித், செயல் தலைவர்கள் தேவேந்தர் யாதவ், ராஜேஸ் லிலோதியா, ஹரூன் யூசுப் ஆகியோர் ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

கருத்துக் கணிப்பு

ஆம் ஆத்மி கட்சி சார்பில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் டெல்லியில் தனித்துப் போட்டியிட்டாலே 7 தொகுதிகளிலும் வெல்ல முடியும் அளவுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது எனத் தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஆதரவு தேவையில்லை என்றும் தெரியவந்துள்ளது. இதனால், டெல்லியில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கூட்டணி அமையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இறுதி முடிவை ராகுல் காந்தி எப்போடு எடுப்பார் என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x