Last Updated : 17 Mar, 2019 12:24 PM

 

Published : 17 Mar 2019 12:24 PM
Last Updated : 17 Mar 2019 12:24 PM

4-வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்: திருவனந்தபுரத்தில் சசிதரூர்; சீட் மறுக்கப்பட்ட தாமஸ் அதிருப்தி

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த 4-வது கட்ட பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது. இதில் திருவனந்தபுரத்தில் சசிதரூர் போட்டியிடுகிறார், முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தாமஸுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் தனக்கு சீட் மறுக்கப்பட்டதால், மிகுந்த அதிருப்தியில் கே.வி. தாமஸ் இருக்கிறார். இதனால், பாஜகவுக்கு அவர் செல்லக்கூடும் என்ற பேச்சு எழுந்துள்ளது.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதிவரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.இதில்  மூன்றாவது கட்டத்தில், அதாவது, ஏப்ரல் 23-ம் தேதி கேரள மாநிலத்தில், மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.

இதில் கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளில் 16 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் மற்ற 4 தொகுதிகளை கூட்டணிக் கட்சிக்கும் ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2 தொகுதிகளிலும், புரட்சிகர சோசலிஸ்ட், கேரள காங்கிரஸ் மாணி தலா ஒரு தொகுதியிலும்  போட்டியிடுகின்றன.

காங்கிரஸ் கட்சி 4-வது கட்ட வேட்பாளர் பட்டியலையும், கேரள மாநிலத்துக்கு முதல் பட்டியலையும் நேற்று வெளியிட்டது. இதில் தற்போது எம்.பி.யாக இருக்கும் 8 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது காங்கிரஸ் கட்சி. ஆனால், முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தாமஸ்க்கு எர்ணாகுளம் தொகுதியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு அவருக்கு பதிலாக இளம் வேட்பாளர்  ஹிபி எடனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதில் தற்போது எம்.பியாக இருக்கும் சசி தரூர் திருவனந்தபுரம் தொகுதியிலும், குடிகுனில் சுரேஷ் மாவேலிக்கரை தொகுதியிலும், எம்.கே.ராகவன் கோழிக்கோடு தொகுதியிலும், ஆன்டோ அந்தோனி பத்தினம்திட்டா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். சபரிமலை ஐயப்பன் பிரச்சினை நடந்த பத்தினம்திட்டா தொகுதியில் அந்தோனி போட்டியிடுகிறார்.

இதுதவிர காசர்கோட்டில் ராஜ் மோகன் உன்னிதன், கண்ணூரில் கே.சுதாகரன், பாலக்காட்டில் வி.கே.ஸ்ரீகந்தன், ஆலத்தூரில் ரெம்யா ஹரிதாஸ், சாலக்குடியில் பென்னி பெஹனன், திருச்சூரில் டிஎன். பிரதாபன், இடுக்கியில் டீன் குரியகோஸ் போட்டியிடுகின்றனர்.

மாநில காங்கிரஸ் கட்சி முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் தற்போது வடக்கரை எம்.பியாக இருக்கிறார் என்கிறபோதிலும், இந்த முறை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துவிட்டார். மேலும், ஆலப்புழா தொகுதி எம்.பி. கேசி வேணுகோபாலுக்கு கட்சியில் பல்வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதால், அவருக்கும் தேர்தலில் சீட் கிடைக்காது எனத் தெரிகிறது.

இதற்கிடையே வடநாடு, ஆலப்புழா, அட்டிங்கல், வடகரா ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

எர்ணாகுளம் தொகுதியில் தனக்கு சீட் மறுக்கப்பட்டது என அதிர்ச்சி அளிக்கிறது என்று கே.வி.தாமஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், " எனக்கு 72 வயதாவது என்னுடைய தவறா. நான் என்ன தவறு செய்தேன் எனத் தெரியவில்லை. 7 முறை எம்.பியாக இருந்துள்ளேன். எனக்கு சீட் தராமல் மறுப்பதற்கு ஏதாவது தகுதியான ஒரு காரணத்தை கூறட்டும். கறிவேப்பில்லையை தூக்கி எறிந்ததுபோன்று என்னை தூக்கி எறியமுடியாது" எனத் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x