Last Updated : 09 Mar, 2019 03:49 PM

 

Published : 09 Mar 2019 03:49 PM
Last Updated : 09 Mar 2019 03:49 PM

25 ஆண்டுகள் தீர்க்க முடியாத ராமர் கோயில் விவகாரத்தை மத்தியஸ்தர்கள் தீர்த்துவிடுவார்களா?- சிவசேனா கேள்வி

ராமர் கோயில் விவகாரத்தில் அவசரச் சட்டம் பிறப்பித்து கோயில் கட்டுவதை தொடங்க வேண்டும். மத்தியஸ்தர்களால் ராமர் கோயில் விவகாரத்தில் தீர்வு எட்ட முடியாது என்று சிவசேனா கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

ராமர் கோயில் விவகாரத்தில்  பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டுவதற்காக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எப்.எம். கலிபுல்லா, வாழும்கலை இயக்குநர் ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரை நியமித்து  உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து சிவசேனா கட்சி தனது அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் தலையங்கத்தில் கருத்து தெரிவித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ராமர் கோயில் விவகாரத்தில் தீர்வு காண்பதற்காக 3 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மக்களவைத் தேர்தலுக்குப் பின்புதான் தனது முடிவை அறிவிக்கும்.

நாங்கள் கேட்கும் கேள்வி ஒன்றுதான், மத்தியஸ்தம் மூலம் ராமர் கோயில் விவகாரம் தீர்க்க முடியும் என்றால், ஏன் கடந்த 25 ஆண்டுகளாகத் தீர்க்க முடியாமல் இருந்து வந்தது, ஏன் நூற்றுக்கணக்கிலான கரசேவகர்கள் உயிர் தியாகம் செய்தார்கள்.

தேசத்தின் அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றால் தீர்க்க முடியாத ராமர் கோயில் விவகாரத்தை, மத்தியஸ்தர்கள் 3 பேரும் தீர்த்துவிடுவார்களா.

இத்தனை ஆண்டுகளாக ராமர் கோயில் விவகாரத்தில் போராட்டம் செய்தவர்கள், மத்தியஸ்தம் தேவையில்லை என்றிருந்தநிலையில் ஏன் இப்போது, மத்தியஸ்தம் விஷயத்தை உச்ச நீதிமன்றம் முயல்கிறது. அயோத்தி விவகாரம் சாதாரண இடம் தொடர்பான விஷயம்தான். ஆனால், மிகவும் உணர்வுப்பூர்வமானது. இந்த விஷயத்தில் மத்தியஸ்தம், சட்டம் ஆகியவை உதவாது.

அயோத்தி விவகாரத்தில் உயிரிழந்த நூற்றுக்கணக்கான கரசேகவர்களை நாம் மறந்துவிட முடியாது. இப்போதுள்ள பிரச்சினை என்பது வெறும் 1,500 சதுர அடி நிலத்துக்கானதுதான், 63 ஏக்கர் நிலத்துக்கானது அல்ல.

மத்திய அரசு அவசரச் சட்டத்தை இயற்றி, ராமர் கோயில் கட்டும் பணியைத் தொடங்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதைத்தான் எங்கள் தலைவர் அயோத்தி சென்றபோது கூறினார்.

ஜம்மு காஷ்மீர் என்பது தேசிய அடையாளம், கவுரவம். ராமர் கோயில், இந்துக்களின் கவுரவம் தொடர்பானது. ராமர் தனது சொந்த 1500 சதுர அடி நிலத்துக்காக மத்தியஸ்தர்களுடன் பேச உள்ளார். கடவுள்கூட சட்டப்போரத்தில் இருந்து தப்பிக்க முடியவில்லை. இதற்கு யார் பொறுப்பேற்பது

இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x