Last Updated : 07 Mar, 2019 12:48 PM

 

Published : 07 Mar 2019 12:48 PM
Last Updated : 07 Mar 2019 12:48 PM

லக்னோ பாலத்தில் பழங்களை விற்ற காஷ்மீரி சிறுவியாபாரிகள் மீது சரமாரி அடிஉதை: வைரலாகும் காவி உடை அணிந்தவர்களின் தாக்குதல் காட்சி

உத்தரப் பிரதேசத்தில் பாலத்தின் மீது பழம்விற்றுக்கொண்டிருந்த இரு காஷ்மீரிகள் மீது காவி உடை அணிந்தவர்கள் கழிகளைக்கொண்டு தாக்குதல் நடத்திய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் தாலிகஞ்ச் பகுதியில் காஷ்மீர் இளைஞர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் விவரம் வருமாறு:

இரு காஷ்மீர் இளைஞர்களும் தாலிகஞ்ச் பாலத்தின் வழியே பழங்களை விற்றுக்கொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கு வந்த காவி உடை அணிந்த கும்பல் ஒன்று இரு காஷ்மீர் இளைஞர்களையும் தங்கள் கையிலிருந்து கழிகளால் கடுமையாக தாக்குவது இவ் வீடியோவில் பதிவாகியுள்ளது.

நேற்று மாலை (புதன்கிழமை) நடந்துள்ள இச்சம்பவத்தை நேரில் பார்த்த உள்ளூர்வாசிகள் சிலர் தாக்குதலிலிருந்து இளைஞர்களை மீட்டுள்ளனர். பின்னர் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காவல்நிலைய அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், காஷ்மீரி இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்று இன்னும் அடையாளங் காணப்படவில்லை.

4 பேர் கைது

ஹாசன்காஞ்ச் காவல்நிலையத்திற்கு தொடர்பான இவ்வழக்கை நாங்கள் பதிவுசெய்துகொண்டுள்ளோம். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான பஜ்ரஞ்ச் சோங்கர் என்பவர் உள்ளிட்ட நால்வர் மட்டும்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு காவல்நிலைய அதிகாரி தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள சோங்கர் விஸ்வ இந்து தளக் கட்சியின் தலைவர் என்று கூறப்படுகிறது.

பிப்ரவரி 14 ம் தேதி புல்வாமா பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீர் மக்கள், குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் மீதான துன்புறுத்தல் சம்பவங்கள் நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவாகியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x