Published : 02 Mar 2019 05:36 PM
Last Updated : 02 Mar 2019 05:36 PM

விமானி அபிநந்தனை மருத்துவமனையில் சந்தித்துப் பேசினார் நிர்மலா சீதாராமன்

பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக விமானி அபிநந்தனை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினார். அப்போது விமானப்படை தளபதி பிரேந்தர் சிங் தனோவா உடன் இருந்தார்.

 

கடந்த 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் -இ-முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக கடந்த 26-ம் தேதி பாகிஸ்தான் எல்லைக்குள் 50 கி.மீ. ஊடுருவிய இந்திய போர் விமானங்கள் பாலகோட், முஷாபராபாத், சாகோட்டி ஆகிய 3 இடங்களில் செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம்களை குண்டுகளை வீசி அழித்தன. இதில் 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

 

போர் பதற்றம்

இதைத் தொடர்ந்து இருநாடு களுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. கடந்த 27-ம் தேதி பாகிஸ்தான் விமானப்படையின் போர் விமானங்கள் காஷ்மீரின் ரஜவுரி பகுதியில் இந்திய ராணுவ நிலைகளை தாக்க முயன்றன. அந்த விமானங்களை இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் விரட்டியடித்தன. அப்போது பாகிஸ்தானின் எப் 16 ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

 

இந்த வான்வெளி சண்டையின் போது பாகிஸ்தான் போர் விமானங்களை அவர்களின் எல்லைக்கே சென்று இந்திய போர் விமானங்கள் விரட்டின. இந்திய விமானி அபிநந்தன் மிக் 21 ரக விமானத்தில் பாகிஸ்தானின் எப் 16 ரக விமானத்தை விரட்டிச் சென்றார்.

 

அப்போது எதிர்பாராதவிதமாக மற்றொரு பாகிஸ்தான் போர் விமானத்தின் ஏவுகணை, அபிநந்தனின் விமானத்தை தாக்கியது. பாராசூட் உதவியுடன் அவர் உயிர் தப்பினார். ஆனால் அவர் பாகிஸ்தானில் தரையிறங்கியதால், பாகிஸ்தான் ராணுவம் சிறைபிடித்து ராவல்பிண்டியில் உள்ள அந்த நாட்டு ராணுவ தலைமையகத்துக்கு அழைத்துச் சென்றது.

 

முகத்தில் ரத்த காயத்துடன் அவர் இழுத்துச் செல்லப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதற்கு சர்வதேச அளவில் கடும் கண்டனம் எழுந்தது. ஜெனீவா உடன்படிக்கை மீறப்பட்டிருப்பதாக பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டின.அவரை மீட்கக் கோரி குரல்கள் எழுப்பப்பட்டன.

 

பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பேசிய அந்த நாட்டு பிரதமர் இம்ரான் கான், "நல்லெண்ண அடிப்படையில் விமானி அபிநந்தன் வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்படுவார்" என்று அறிவித்தார். இதன்பிறகு இந்திய எல்லை யான அட்டாரியில் நேற்றிரவு 9.20 மணிக்கு இந்திய தரப்பிடம் அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டார்.

 

அட்டாரியில் இருந்து கார் மூலம் அமிர்தசரஸுக்கு அபிநந்தன் அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் விமானப் படை விமானம் மூலம் நேற்றிரவு அவர் டெல்லி சென்றார். இதைத் தொடர்ந்து அவருக்கு டெல்லியில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

 

அதையடுத்து விமானப் படை தளபதி பிரேந்தர் சிங் தனோவா, அபிநந்தனைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பாகிஸ்தான் காவலில் இருந்தபோது நடந்த சம்பவங்கள் குறித்து விரிவாக பேசியிருப்பார் என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் அபிநந்தனை சந்தித்துப் பேசினார். அப்போது விமானப் படை தளபதி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உடன் இருந்தனர்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x