Published : 13 Feb 2019 05:34 PM
Last Updated : 13 Feb 2019 05:34 PM

‘‘நாட்டின் தன்னம்பிக்கை இதுவரை இல்லாத அளவு உயர்வு’’ - மக்களவை கடைசி நாளில் பிரதமர் மோடி பெருமிதம்

16வது மக்களவையின் இறுதிநாளில் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவின் தன்னம்பிக்கை இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்தார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பதவிக்காலம் வரும்  மே மாதத்துடன் நிறைவடைகிறது. புதிய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுகிறது. 2014-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு அமைந்த 16-வது மக்களவையின் கடைசி நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

‘‘மக்களவையின் 17 அமர்வுகளில் எட்டு அமர்வுகள் முழு அளவில் நடந்துள்ளன. 16-வது மக்களவையின் ஒட்டுமொத்த செயல்பாடு, பணிகள் 85 சதவீத அளவில் இருந்துள்ளன. இந்த அவையிலும், அமைச்சரவையிலும் அதிகஅளவில் பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.

இரண்டு மூத்த பெண் அமைச்சர்கள், மக்களவை சபாநாயகர், மக்களவை பொதுச்செயலர் உள்ளிட்டோர் பெண்கள். 219 மசோதாக்களில் 203 மசோதாக்கள்  நிறைவேற்றப்பட்டுள்ளன. கருப்பு பணத்தை தடை செய்யும் மசோதவும் இதில் ஒன்று. இந்த அவைக்கு ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்து ஆக்கபூர்வமாக பணியாற்றியுள்ளன.

இந்த நாட்டுக்கு தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. முழு பெரும்பான்மை கொண்ட அரசாக இந்த அரசு இருந்ததால் பல சாதனைகளை செய்ய முடிந்தது. உலக அளவிலும் பெரிய மரியாதையை பெற முடிந்தது.

சட்டவிரோத பணபரிமாற்ற சட்டம், ஜிஎஸ்டி சட்டம், ஆதார் சட்டம், பினாமி சொத்து பறிமுதல் சட்டம், முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு சட்டம் என பல சட்டங்கள் இந்த அவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன’’ என பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x