Last Updated : 19 Feb, 2019 01:05 PM

 

Published : 19 Feb 2019 01:05 PM
Last Updated : 19 Feb 2019 01:05 PM

பாகிஸ்தான் மருமகள் தேவையில்லை; தெலங்கானா தூதர் சானியா மிர்சாவை நீக்க வேண்டும்: பாஜக எம்எல்ஏ வலியுறுத்தல்

தெலங்கானா மாநிலத் தூதர் பதவியில் இருக்கும் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை நீக்க வேண்டும், பாகிஸ்தான் மருமகள் தேவையில்லை என்று பாஜக எம்எல்ஏ ராஜா சிங் வலியுறுத்தியுள்ளார்.

புல்மாவா மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு சானியா மிர்சா உள்ளிட்ட எந்த பிரபலங்களும் எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன.

இதற்கு சமூக ஊடங்களில் விளக்கம் அளித்த சானியா மிர்சா, "பிரபலங்கள் என்றால் சமூக ஊடகங்கள் வாயிலாக நாட்டுப்பற்றை விளக்கும் வகையில் கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. விரக்தியில் இருக்கும் தனிப்பட்ட நபர்கள் சிலர் தங்களின் கோபத்தையும் வெறுப்பையும் காண்பிக்க இடமில்லாமல் எங்களின் மீது கொட்டுகிறீர்கள். முடிகிற இடங்களில் எல்லாம் வெறுப்பை விதைக்கிறீர்கள்" எனத் தெரிவித்திருந்தார்.

இந்தக் கருத்தையடுத்து தெலங்கானா மாநில கோஷாமஹால் தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜா சிங் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், " தெலங்கானா மாநிலத் தூதராக நியமிக்கப்பட்டு இருக்கும் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை அந்தப் பதவியில் இருந்து முதல்வர் சந்திரசேகர் ராவ் நீக்க வேண்டும். நமக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த மருமகள் தேவையில்லை.

சானியா மிர்சாவை நீக்குவதன் மூலம், பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்குக்கு அதிர்ச்சி அளித்து, தீவிரவாதத்துக்குத் துணைபுரியும் பாகிஸ்தானுக்கு கண்டனத்தைத் தெரிவிக்க இயலும்.

பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தெலங்கானா மாநில அரசும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும். சானியா மிர்சாவை நீக்கிவிட்டு, வேறுவீரர், வீராங்கனைகளைத் தூதராக நியமிக்கலாம்.

விவிஎஸ் லட்சுமண், சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோர் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், இவர்கள் நாட்டுக்கு ஏராளமான பெருமைகளைச் சேர்த்துள்ளார்கள். அவர்களைத் தூதராக நியமிக்கலாம்''.

இவ்வாறு ராஜா சிங் தெரிவித்தார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்தவரான சானியா மிர்சா, கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து மாநிலத்தின் தூதராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x