Published : 02 Feb 2019 05:05 PM
Last Updated : 02 Feb 2019 05:05 PM

பட்ஜெட் 2019: மோடியின் மெகா பென்ஷன் திட்டம் செயல்படுத்தக் கூடியதா? அல்லது தேர்தல் வாக்குறுதியா? - தொழிற்சங்கங்கள் கூறுவதென்ன?

ஆளும் பாஜகவின் மோடி அரசு தன் இடைக்கால பட்ஜெட்டில் மெகா பென்ஷன் திட்டத்தை அறிவித்தது. இது இந்த பட்ஜெட்டின் மிகப்பெரிய அறிவிப்பாகப் பார்க்கப்படுகிறது, விதந்தோதப்படுகிறது, ஆனால் உண்மை நிலவரம் என்ன என்பதை தொழிற்சங்கங்களும் நிபுணர்களும் கூறியுள்ளனர்.

 

அமைப்புசாரா தொழிலாளர்களின் தொழிற்சங்கங்கள், சமூக ஊழியர்கள் ஆகியோர் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்த அவ்வளவு சுலபமானதல்ல என்று கூறுகின்றனர்.

 

‘பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன்’ என்ற இந்தப் பென்ஷன் திட்டம் பங்களிப்பு முறை பென்ஷன் திட்டமாகும். இதில் 60 வயதாகிவிட்டால் ரூ.3000 மாதப் பென்ஷன் உறுதியாகக் கிடைக்கும் என்பதே பியூஷ் கோயல் பட்ஜெட்டில் அறிவித்தது.  இதற்குப் பங்களிப்புச் செய்ய வேண்டும், 29 வயதில் இந்தத் திட்டத்தில் இணைபவர்கள் மாதம் ரூ.100-ம் 18 வயதில் இணைபவர்கள் மாதம் ரூ.55-ம் பங்களிப்புச் செய்ய வேண்டும். இதே தொகையை அரசும் பங்களிக்கும்.

 

பியூஷ் கோயல் நேற்று ஏன் இந்தத் திட்டம் அவசியம் என்று கூறும்போது, “இந்தியாவின் பாதி வருமானம் அமைப்புசாரா தொழில்களான கட்டுமானத் தொழில், ரிக்‌ஷா ஓட்டுநர்கள், குப்பை அகற்றுவோர், தெரு வியாபாரிகள், விவசாயத் தொழிலாளர்கள், பீடி சுற்றுபவர்கள், தோல், கைத்தறி ஆகிய பிரிவுகளிலிருந்து பெருமளவில் பங்காற்றும் 42 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்களிடமிருந்து பெறப்படுவதே. வீட்டு வேலை செய்பவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளது.  இவர்களுக்கு வயதான காலத்திலும் சிரமம் இல்லாத வண்ணம் சமூகப் பாதுகாப்புத் தேவை” என்றார்.  இதற்காக ரூ.500 கோடி ஒதுக்கப்படுவதாகவும் தேவைப்பட்டால் இன்னும் அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தது, இது தவிர மத்திய அரசின் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் இவர்களுக்கு உள்ளது.

 

“இத்திட்டம் மூலம் அமைப்புசாரா துறை தொழிலாளர்கள் 10 கோடி பேர் பயன்பெறுவார்கள், அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய பென்ஷன் திட்டமாக இது அமையும்” என்றார் கோயல்.

 

அடல் பென்ஷன் யோஜனா என்பது என்ன?

 

அருண் ஜேட்லி 2015-ல் அறிவித்ததுதான் அடல் பென்ஷன் யோஜனா, இதுவும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டதுதான். தற்போது பியூஷ் கோயல் அறிவித்த பென்ஷன் திட்டம் அடல் பென்ஷன் திட்டத்தின் ஒரு விரிவே என்கின்றனர் சில நிபுணர்கள்.

 

அடல் யோஜனா திட்டத்தின் கீழ்,  பங்களிப்பு செய்த காலத்திற்கேற்ப பென்ஷன் தொகை மாதம் ரூ.1000 முதல் 5000 வரை இருக்கும். இந்தத் திட்டத்தில் சேர குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது 40.   18 வயதில் சேர்ந்தால் ரூ.1000 முதல் 5,000 வரையிலான் பென்ஷன் தொகைக்கு முறையே மாதம்  ரூ.42 மற்றும் ரூ210 கட்ட வேண்டும்.  இதே திட்டத்தில் 40 வயதில் சேர்ந்தால் முறையே ரூ.291 மற்றும் ரூ.1,454 தொகை கட்ட வேண்டும். அரசும் 50% பங்களிப்பு செய்யும் அல்லது ஆண்டுக்கு ரூ.1000 பங்களிப்பு செய்யும். அதாவது இதில் எது குறைவோ அதை அரசுப் பங்களிப்பாக பெறலாம். இதிலும் கூட ஜூன் 1, 2015-லிருந்து டிசம்பர் 31, 2015ற்குள் இத்திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் அரசுப் பங்களிப்பு என்ற சலுகை கிடைக்கும்.  மேலும் இது 2019-20 நிதியாண்டு வரைதான் நீடிக்கும்.

 

இந்தத் திட்டத்தில் சேர்ந்து விட்டு பாதியிலேயே பங்களிப்பு செய்யாமல் இருந்தால் பென்ஷன் கணக்கை மூடிவிடுவது உள்ளிட்ட அபராதங்கள் உண்டு.  ஆனால் இப்போது  பியூஷ் கோயல் அறிவித்த மெகா பென்ஷன் திட்டத்தில் எந்த வித விவரங்களும் வெளியிடப்படவில்லை.

 

இந்நிலையில் தொழிலாளர்களுக்கு பென்ஷன் வழங்குவது அரசின் கடமை மற்றும் பொறுப்பு என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.

 

சி.ஐ.டி.யூ. பொதுச் செயலர் தபன் சென் தி ஒயர் இணையதளத்துக்கு கூறும்போது, இது வெறும் நோக்கபூர்வமான ஒரு அறிவிப்பே, இதை வைத்துக் கொண்டு கோயல் பெரிய பெரிய பயன்களையெல்லாம் கற்பனை செய்கிறார் என்றார்.

 

“பென்ஷனைப் பெறுவதற்கான குறைந்தபட்ச பங்களிப்புக் காலம் எவ்வளவு? ஏனெனில் தொழிலாளர்கள் பங்களிப்பு செய்ய வேண்டுமென்றால் அவர்கள் தொடர்ந்து பணியில் இருக்க வேண்டும், அமைப்புசாரா தொழிலாளர்கள் தொடர்ந்து பணியிலிருப்பார்கள் என்று கூற முடியாது, சிலவேளைகளில் நீண்ட இடைவெளி கூட ஏற்படும் அப்போது அவர்கள் பென்ஷன் தொகைக்காக பங்களிப்புச் செய்ய முடியாமல் போனால் என்ன ஆகும்? இதற்குப் பதில் இல்லை. அப்படியென்றால் இந்தக் காலக்கட்டத்தில் அரசே அவர் பென்ஷன் தொகையைக் கட்டுமா? அமைப்புசாரா தொழிலாளர்கள் அடிக்கடி வேலையை மாற்றக்கூடியவர்கள் இவர்களை எப்படி பதிவு செய்யப் போகிறார்கள்?” என்று தி ஒயரில் கேட்கிறார் சென்.

 

ஏ.ஐ.டி.யூ.சி பொதுச்செயலாளர் அமர்ஜீத் கவுர் கூறும்போது, இது வெறும் தேர்தல் கால பம்மாத்து, ஏற்கெனவே உள்ள பென்ஷன் திட்டத்தை ஏமாற்றுவேலை செய்து நன்றாகத் தொனிக்கும் புள்ளிவிவரங்களை மட்டும் அளித்து வருகிறது. ஈ.பி.எஃப்.ஓ ஏற்கெனவே அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பல்வேறு திட்டங்களில் பென்ஷன் அளித்து வருகிறது.  இந்தக் கவரேஜை விரிவு படுத்தவோ, மேலும் நெறிப்படுத்தவோ தெளிவான நடைமுறை உத்தி இல்லாமல் கூடுதலாக திட்டம் அறிவித்தாலும் பயனில்லாமலே போகும்.  மேலும், இந்தத் துறையின் தொழிலாளர்கள் கேட்பது “கவுரவமாக வாழ மாதம் ரூ.7000 பென்ஷன் கோரியுள்ளனர், இவர்கள் 3000 என்று குறைத்துள்ளனர்” என்றார்.

 

முறைசாரா தொழில்களில் இருக்கும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நிஜமான பே-ரோல்களில் இருப்பதில்லை. இதனால் சமூகப் பாதுகாப்போ, பென்ஷனோ இவர்களுக்குக் கிடைப்பதில்லை. பல நிறுவனங்கள் தொழிலாளர்கள் எண்ணிக்கையை குறைவாகக் கணக்கு காட்டுகின்றனர், இதனால் பட்டியலில் இல்லாதவர்களுக்கு எந்த ஒரு சமூகப்பாதுகாப்புத் திட்டங்களும் கிடைப்பதில்லை.  ஆகவே இத்தகைய தொழிலாளர்களே அதிகம் என்பதால், இவர்கள் பெயர் பேப்பரில் இடம்பெறாதது என்பதால் இந்தப் பென்ஷன் திட்டம் எப்படி வெற்றி பெற முடியும் என்பதே தொழிற்சங்கம், நிபுணர்களின் கேள்விக்குறியாக உள்ளது.

 

இது குறித்து ஜே.என்.யூ. பல்கலைப் பேராசிரியர் தி ஒயர் ஊடகத்துக்குக் கூறும்போது, “அரசு இதனைச் செய்ய உண்மையில் மனம் கொண்டிருந்தால் இதனை சட்டமாக்க வேண்டும், வெறும் திட்டமாக வைத்திருந்தால் அடுத்த அரசு வந்து இதைக் காலி செய்யும்.  சட்டப்பூர்வமானதால்தான் தொழிலாளர்களுக்கு நல்லது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x