Published : 15 Feb 2019 03:57 PM
Last Updated : 15 Feb 2019 03:57 PM

‘சுதந்திர காஷ்மீர்’ - பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பற்றிய சொல்லாடலை சர்ச்சைக்குரிய வகையில் மாற்றிய அமெரிக்கா

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்பதற்கு பதிலாக ஆசாத் காஷ்மீர் என்று தனது பயண எச்சரிக்கை குறிப்பில் அமெரிக்கா தெரிவித்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அமெரிக்க அதிகாரபூர்வ அறிவிப்புகளில், பயண எச்சரிக்கைஆலோசனைகளில் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரை ‘பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீர்’ என்றே அமெரிக்கா வழக்கமாக குறிப்பிட்டு வந்தது.

இந்தியா காஷ்மீரின் அந்தப் பகுதியை பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் என்றுதான் குறிப்பிட்டு வருகிறது. அமெரிக்கா அந்தப் பகுதியை ‘பாகிஸ்தான் நிர்வகிப்பு காஷ்மீர்’  என்று இத்தனை காலமாக குறிப்பிட்டு வந்தது.

இந்நிலையில் பிப்ரவரி 13ம் தேதி அமெரிக்க அரசாங்கம் வெளியிட்டுள்ள பயண ஆலோசனைக் குறிப்புகளில்  பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரை  ‘ஆஸாத் காஷ்மீர்’ அதாவது ‘சுதந்திர காஷ்மீர்’ என்று குறிப்பிட்டு சொல்லாடலை மாற்றியுள்ளது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில், நேற்று (வியாழக்கிழமை) ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 45 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர்.

இந்நிலையில் கடந்த 13-ம் தேதியே அமெரிக்கா தனது நாட்டு மக்களுக்கு ஒரு பயண எச்சரிக்கை குறிப்பை வெளியிட்டிருக்கிறது.

இதனால், தெற்காசிய பிராந்தியத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது குறித்து அமெரிக்கா முன்னரே அறிந்திருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.

அதைவிட முக்கியத்துவம் பெற்றிருக்கிறது அமெரிக்கா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஆசாத் காஷ்மீர் எனக் கூறியிருப்பது. இந்தியா ‘ஆஸாத்’ என்ற சொல்லை பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீருக்கு கூறக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. அதாவது சுதந்திர காஷ்மீர் என்று அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு ஆதரவாகக் கூறியிருப்பதாக இது பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானின் கைபர் பதுன்க்வா மாகாணத்தில் தீவிரவாத தாக்குதலுக்கான அச்சுறுத்தல் அதிகமாக இருக்கிறது.

ஆசாத் காஷ்மீரில் ஆயுதச் சண்டைக்கு வாய்ப்பிருக்கிறது என்பதால் அந்தப் பகுதிகளுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்கவும் என்று அந்த பயணக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x