Published : 02 Feb 2019 11:29 AM
Last Updated : 02 Feb 2019 11:29 AM

பட்ஜெட்டில் பசு பாதுகாப்புக்கு ரூ.750 கோடி: உண்மையில் பயனுள்ள திட்டமா?

2019-20 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சரும் ரயில்வே அமைச்சருமான பியூஷ் கோயல் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் நாட்டு பசு இனங்களின் பாதுகாப்புக்காக ரூ.750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்ட நிதி கால்நடை நலம் மற்றும் பராமரிப்புத் துறையின் கீழ் செயல்படும் ராஷ்ட்ரிய கோகுல் மிஷனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில், இதற்காக ரூ.301.5 கோடி ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டு நிதி இரண்டு மடங்குக்கும் மேலாக உயர்த்தப்பட்டுள்ளது. எனினும் பட்ஜெட் ஆவணங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியில், ரூ.187.73 கோடியை மட்டுமே கால்நடைத்துறை செலவழித்துள்ளது.

இத்துறை வெளியிட்டுள்ள குறிப்பில், ''2014-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் தொடங்கப்பட்டது. இதற்காக 2014-15 முதல் 2016-17 வரை ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டது. உள்நாட்டு பசு இனங்களைப் பாதுகாக்கவும் அவற்றின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும், மரபுரீதியாக அவற்றை வலிமையாக்கவும் இத்தொகை பயன்படுத்தப்படும்'' என்று அறிவிக்கப்பட்டது.

ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் அமைப்பு, பசு பாதுகாப்பு மையங்களை உருவாக்கி அவற்றில் உள்நாட்டு இனங்களைப் பாதுகாக்கத் திட்டமிட்டது. இதன்மூலம் நாட்டுப் பசுக்களின் அதிக பால் உற்பத்தி, இனப்பெருக்க உயர்வு, ஜெர்சிக்கள் உள்ளிட்ட வெளிநாட்டு இனங்களைக் காட்டிலும் இந்தியப் பசுக்கள் மற்றும் காளைகளின் தரத்தை அதிகப்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ள முடிவு செய்தது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த அமைப்பு, வயதான மாடுகள், பயன்படாத நிலையில் உள்ள அடி மாடுகளைப் பாதுகாக்க எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. 2017-ல் அறிவிக்கப்பட்ட பசு வதைத் தடை, வயதான மாடுகளை அடிமாடுகளாக அனுப்பும் விவசாயிகளைத் துன்பத்தில் ஆழ்த்தியது.

பின்னாட்களில் தடை நீக்கிக் கொள்ளப்பட்டாலும், பசு குண்டர்களால் தாக்கப்படும் அச்சம் விவசாயிகள் மத்தியில் இருந்துகொண்டேதான் இருக்கிறது.

இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்ட பசு பாதுகாப்பு திட்ட நிதி, உண்மையில் பயனுள்ளதா என்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x