Last Updated : 11 Feb, 2019 10:40 AM

 

Published : 11 Feb 2019 10:40 AM
Last Updated : 11 Feb 2019 10:40 AM

2 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களுக்கு துணிப்பை மட்டும் வழங்கி வரும் வியாபாரி: வேலைவாய்ப்பை உருவாக்க கேரள அரசுக்கும் யோசனை

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் முந்திரி வியாபாரம் செய்துவரும் வியாபாரி ஒருவர் கடந்த 2 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களுக்கு பிளாஸ்டிக் பைகளை வழங்காமல், துணிப்பைகளை மட்டுமே வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் துணிப்பைகளை தயாரிப்பதன் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்து அரசுக்கும் ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அதை அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது.

திருவனந்தபுரம் பட்டம் பகுதியைச் சேர்ந்தவர் எஸ். மோகன் குமார். கேரள அரசின் முந்திரி கழகத்தின் சார்பில் முந்திரிப் பருப்பு விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த இரு ஆண்டுகளாகச் சுற்றுச்சூழலுக்கு தன்னால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை மோகன் குமார் தவிர்த்து வருகிறார். பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பைகளை மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு மோகன் குமார் வழங்கி வருகிறார்.

இதுகுறித்து மோகன் குமாரிடம் 'தி இந்து' சார்பில் (ஆங்கிலம்) கேட்டபோது, அவர் கூறியதாவது:

"எனக்கு சொந்த ஊர் கொல்லம். அங்கிருந்துதான் மாதத்துக்கு 300 துணிப்பைகளை தைத்து வாங்கி வருகிறேன். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தக்கூடாது என்று முடிவு செய்து, பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதைத் தவிர்த்து, துணிப்பைகளைப் பயன்படுத்தி வருகிறேன்.

வாடிக்கையாளர்களும் கூடுதலாக துணிப்பைகள் கேட்டாலும், நான் வழங்குகிறேன். துணிப்பைகள் தைப்பதற்காக பழைய புடவைகளை விலைக்கு வாங்கிப் பயன்படுத்துகிறேன்.

மாநிலத்தில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைக்கவும், வேலைவாய்ப்பு உருவாக்கவும் முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பது குறித்தும், வேலைவாய்ப்பு உருவாக்குவது குறித்தும் தெரிவித்தேன்.

அதாவது, கேரள வீடுகளில் நாள் ஒன்றுக்கு பல்வேறு பயன்பாடுகளுக்கு 15 பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துகிறார்கள். மாநிலத்தில் 65 லட்சம் குடும்பங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 6.5 கோடி பிளாஸ்டிக் பைகள் நாள் தோறும் பயன்படுத்தப்படுகின்றன.

ஒவ்வொரு குடும்பத்தினரும் வீட்டில் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் புடவை அல்லது போர்வையை 100 ரூபாய்க்கு விலைக்குக் கொடுத்தால், அதன் மூலம் 10 துணிப்பைகளை தைத்து தர முடியும். இது ஏறக்குறைய 3 மாதங்களில் 19.5 லட்சம் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது குறைந்துவிடும். வேலைவாய்ப்பும் இதன் மூலம் உருவாகும்.

ஒரு தையல்காரர் ஒரு மணி நேரத்துக்கு 10 துணிப்பைகளை 8 ரூபாய்க்கு தைத்துக் கொடுக்க முடியும் என்றால், நாள் ஒன்றுக்கு ரூ.640 வருமானம் கிடைக்கும். மாதத்துக்கு ரூ.16 ஆயிரம் வருமானம் ஈட்ட முடியும். 25 நாட்களில் 2 ஆயிரம் துணிப்பைகளை தைத்துவிடுவார். மாநிலம் முழுவதும் மாதத்துக்குச் சராசரியாக 6.5 கோடி துணிப்பைகள் தேவை. இந்தத் தொழில் மூலம் மாநிலத்தில் 32 ஆயிரத்து 500 பேர் மாதத்துக்கு வேலை பெறுவார்கள். ரூ.52 கோடி வரை வருமானம் பெறுவார்கள் என்று கூறி இருந்தேன்.

எனது திட்டத்தையும், ஆலோசனைகளையும் பாராட்டிய முதல்வர் அலுவலகம், உள்ளாட்சி நிர்வாகத்துக்கு உட்பட்ட சுயஉதவிக் குழுவுக்குப் பரிந்துரை செய்தது. தற்போது என் மனைவி சிறீலேகா துணிப்பைகள் தைத்துக் கொடுத்து வருகிறார்.

புதிய துணியில் பைகள் தைத்துக்கொடுத்தால், அது விலை அதிகமாக விற்க வேண்டியது இருக்கும். ஆனால், பழைய துணிகள், பயன்படுத்தாத துணிகள் மூலம் துணிப்பைகள் தைத்தால், விலை குறைவாக வழங்க முடியும்''.

இவ்வாறு மோகன் குமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x