Last Updated : 03 Feb, 2019 06:27 PM

 

Published : 03 Feb 2019 06:27 PM
Last Updated : 03 Feb 2019 06:27 PM

பிச்சை எடுத்த ஓய்வு பெற்ற ராணுவ வீரருக்கு உதவி: கம்பீரின் ட்விட்டால் களத்தில் இறங்கிய பாதுகாப்புத்துறை

டெல்லியில் உதவிக்காகப் பிச்சை எடுத்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் நிலையைப் பார்த்த முன்னாள் இந்திய அணி வீரர் கவுதம் கம்பீர், பாதுகாப்புத் துறை உதவ வேண்டும் என்று ட்வீட் செய்திருந்தார்.

கம்பீரின் ட்விட்டுக்கு உடனடியாக பதில் அளித்த பாதுகாப்புத்துறை ஓய்வு பெற்ற ராணுவ வீரருக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என உறுதியளித்தது.

இந்திய ராணுவத்தில் கடந்த 1965 முதல் 1971ம் ஆண்டு பணியாற்றியவர் பீதாம்பரம். பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியப் போரில் பங்கெடுத்துள்ளார் பீதாம்பரம். அதன்பின் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இவருக்கு ராணுவத்தில் இருந்து அளிக்கப்பட்டு வந்த ஓய்வூதியம் சில தொழில்நுட்ப காரணங்களால் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் டெல்லி கன்னாட் பேலஸ் பகுதியில் ஒரு பதாகையில் தன்னுடைய விவரங்கள் அனைத்தையும் எழுதி, தனக்கு யாரேனும் உதவி செய்ய வேண்டும் என்று பீதாம்பரம் சாலையில் செல்வோரிடம் கோரினார்.

இதைப் பார்த்த கவுதம் கம்பீர், அவரைப் புகைப்படம் எடுத்து, அவரிடம் விவரங்களைக் கேட்டறிந்தார். அதன்பின் தனது ட்விட்டர் பக்கத்தில், பீதாம்பரம் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்குக் கம்பீர் நேற்று ட்வீட் செய்து தெரியப்படுத்தினார்.

கம்பீர் ட்விட்டரில் கூறுகையில் " இவர்தான் திரு பீதாம்பரம். இந்திய ராணுவத்தில் 1965 மற்றும் 1971-ம் ஆண்டு போரில் பங்கேற்றுள்ளார். அவரின் அடையாள எண்ணை ஆய்வு செய்துகொள்ளவும். ஒரு சில தொழில்நுட்ப காரணங்களால் இவருக்கு ராணுவ ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் இதில் உடனடியாக தலையிட்டு கன்னாட் பேலஸ் பகுதியில் உதவிக்காக பிச்சையெடுத்துவரும் ராணுவ வீரரின் துயரை போக்க வேண்டும் " எனத் தெரிவித்திருந்தார்.

கவுதம் கம்பீரின் ட்விட்டைப் பார்த்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் பதில் அனுப்பியுள்ளது. அதில், " ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மீது நீங்கள் காட்டிய அக்கறையை வரவேற்கிறோம்.நீங்கள் எழுப்பிய கவலைகள் தீர்க்கப்படும் என உறுதியளிக்கிறோம். ஓய்வுபெற்ற ராணுவ வீரருக்கான பிரச்சினைகள் என்ன என்பது விரைவாக அறிந்து தீர்க்கப்படும்" என பதில் அளித்தது.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x