Published : 25 Feb 2019 02:30 PM
Last Updated : 25 Feb 2019 02:30 PM

பழங்குடிகளை வெளியேற்றுமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: காங்கிரஸ் முதல்வர்கள் சீராய்வு மனு தாக்கல் செய்ய ராகுல் காந்தி வலியுறுத்தல்

பட்டா இல்லாத 11 லட்சம் பழங்குடிகளைக் காடுகளிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

நாட்டிலுள்ள 16 மாநிலங்களில் காடுகளில் வசிக்கும், பட்டா இல்லாத 11,27,446 ஆதிவாசி பழங்குடி மக்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்று  நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவின் சின்கா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டது.

மேலும், அடுத்த விசாரணை நடைபெறவுள்ள வரும் ஜூலை 27 -ம் தேதிக்குள் பட்டா இல்லாத பழங்குடி மக்கள் வனப்பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் இந்த உத்தரவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறும்போது, ''லட்சக்கணக்கான ஆதிவாசிகள், பழங்குடிகளின் வாழ்வாதாரம் குறித்த உரிமையை நமது அரசியலமைப்பு அளிக்கிறது.  நாம் அந்தத் திசையை நோக்கி ஆழமாகப் பணியாற்ற வேண்டிய நேரம் இது. காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் இதுகுறித்தான சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச காங்கரஸ் தலைவர் திக்விஜய் சிங் கூறும்போது, ''இந்த உத்தரவு பழங்குடிகளின் அரசியல் உரிமைகளை மீறுகிறது. இதுகுறித்து நாம் உடனடியாக சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x