Published : 12 Feb 2019 08:38 PM
Last Updated : 12 Feb 2019 08:38 PM

‘அது ரஃபேல் ஓப்பந்தம் பற்றியதேயல்ல’- ராகுல் காந்தி குற்றச்சாட்டை மறுக்கும் ரிலையன்ஸ் டிஃபன்ஸ்

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் இந்திய அதிகாரிகளுக்குத் தெரியும் முன்பே, அனில் அம்பானிக்குத் தெரிந்துவிட்டது. ரகசிய காப்புச் சட்டத்தில் மோடியைக் கைது செய்ய வேண்டும். அவர் அனில் அம்பானிக்கு இடைத்தரகர் போல் செயல்படுகிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காட்டமாக விமர்சித்துள்ளதற்கு ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனம் மறுத்து பதில் அளித்துள்ளது.

 

ராகுல் காந்தி எழுப்பிய குற்றச்சாட்டு:

 

இந்த ஒப்பந்தம் கையொப்பம் ஆவதற்கு 10 நாட்களுக்கு முன், அனில் அம்பானி, பிரான்ஸ் சென்று பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சரைச் சந்தித்துள்ளார். அப்போது இந்த ஒப்பந்தம் குறித்தும், நீங்கள் இதைப் பெறப்போகிறீர்கள் என்பதையும் அனில் அம்பானிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் முக்கியமான விஷயமாக மாறியிருக்கிறது. இந்தக் கேள்விக்கு பிரதமர் மோடி பதில் சொல்லட்டும்.

 

ரஃபேல் ஒப்பந்தம் கையொப்பமாவதற்கு 10 நாட்களுக்கு முன், எவ்வாறு அனில் அம்பானிக்குத் தெரியவந்தது? பாதுகாப்பு அமைச்சகத்துக்குத் தெரியவில்லை, பாதுகாப்பு அமைச்சருக்குத் தெரியவில்லை, பிரதமருக்கு மட்டுமே ரஃபேல் ஒப்பந்தம் தெரியும் என்று நினைத்த வேளையில் இப்போது அனில் அம்பானிக்கும் தெரிந்திருக்கிறது.

 

பாதுகாப்புத்துறை அமைச்சர், இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிட் (எச்ஏஎல்), வெளியுறவுத்துறை செயலர் ஆகியோருக்கு ரஃபேல் ஒப்பந்தம் குறித்து தெரியவில்லை. ஆனால், அனில் அம்பானிக்குத் தெரிந்துவிட்டது. இது தொடர்பாக ஏர்பஸ் அதிகாரி பிரான்ஸ் அதிகாரிக்கு மின்னஞ்சலும் அனுப்பியுள்ளார்.

 

இந்த விஷயம் உண்மையாக இருக்கும் பட்சத்தில், ரகசிய காப்புச் சட்டத்தை பிரதமர் மோடி மீறியுள்ளது உண்மையாகும். அவரை ரசகிய காப்புச் சட்டத்தை மீறிய வகையில் கைது செய்யலாம். ரஃபேல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானிக்கு இடைத்தரகர் போல் பிரதமர் மோடி செயல்படுகிறார்.

 

பிரதமர் மோடி செய்துள்ளது, ராஜ துரோகம். யாருக்காக மோடி உளவு பார்க்கிறார். யாரோ சிலருக்காகப் பாதுகாப்பு அமைச்சக விவரங்களைச் சொல்கிறார். ரஃபேல் ஊழல் ஒப்பந்தத்தில் ஊழல், கொள்முதல், தேசப் பாதுகாப்பு ஆகிய 3 விஷயங்கள் அடங்கியுள்ளன. இவை அனைத்தையும் நாம் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். யாரும் தப்பித்துவிடக்கூடாது, என்று ராகுல் காந்தி கடுமையாகக் குற்றம்சாட்டினார்.

 

தற்போது ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் இதற்கு பதில் அளித்ததாவது:

 

ராகுல் காந்தி தன் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாகக் காட்டிய மின்னஞ்சல் ஏர்பஸ் ஹெலிகாப்டர் ஒப்பந்தத்துக்கானது ரஃபேல் ஒப்பந்தத்திற்கு ஆனது அல்ல. அதாவது ஏர்பஸ் மற்றும் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்துக்கும் இடையேயான மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வரும் சிவில் மற்றும் டிபன்ஸ் ஹெலிகாப்டர் பேச்சுவார்த்தைகள் தொடர்பானது.

 

இது இந்திய அரசுக்கும் பிரான்ஸ் அரசுக்கும் இடையில் கையெழுத்தான ரஃபேல் ஒப்பந்தம் பற்றியதல்ல.  மஹீந்திரா நிறுவனத்துடன் ஏர்பஸ் நிறுவனம் ராணுவ ஹெலிகாப்டர் ஒப்பந்தத்திற்காக கூட்டாளியானது அனைவருக்கும் தெரிந்ததே.

 

மேலும் ரஃபேல் ஒப்பந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனவரி 25, 2016-ல் கையெழுத்தானது, ஏப்ரல் 2015 அல்ல.  இந்த உண்மைகளை அடுத்து தரவுகள் எவ்வாறு வேண்டுமென்றே திரித்து வெளியிடப்படுகின்றன என்பதும் உண்மை மறைக்கப்படுகிறது என்பதும் வெளிப்படை.

 

என்று ரிலையன்ஸ் டிபன்ஸ் செய்தித் தொடர்பாளர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x