Last Updated : 07 Sep, 2014 02:32 PM

 

Published : 07 Sep 2014 02:32 PM
Last Updated : 07 Sep 2014 02:32 PM

ஜெ. சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு ரூ.2.86 கோடி செலவு: தமிழக அரசு ரூ.1.40 கோடியை இன்னும் செலுத்தவில்லை

பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்து குவிப்பு வழக்கிற்கு கடந்த 11 ஆண்டுகளில் கர்நாடக அரசு ரூ.2.86 கோடி செலவு செய்துள்ளது என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தெரியவந்துள்ளது.

இந்த வழக்குக்கான செலவில் ரூ. 1.40 கோடி பணத்தை தமிழக அரசு, கர்நாடக அரசிற்கு இன்னும் செலுத்தவில்லை. 1991-96-ம் ஆண்டில் ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடி சொத்து குவித்ததாக சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டன‌ர்.

சென்னையில் நடைபெற்று வந்த இவ்வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றுமாறு திமுக பொதுச்செயலாளர் க.அன் பழகன் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து 2003-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி வழக்கை பெங்களூருக்கு மாற்றி, இவ்வழக்கின் அனைத்து செலவுகளையும் தமிழக அரசே ஏற்க வேண்டும் ‘என உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் ‘கடந்த 11 ஆண்டுகளில் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கிற்கு கர்நாடக அரசு எவ்வளவு பணம் செலவு செய்துள்ளது?’ என பெங்களூரை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் டி.நரசிம்ம மூர்த்தி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேள்வி எழுப்பி இருந்தார்.அதற்கு கர்நாடக அரசு தேதி வாரியாக இதுவரை எவ்வளவு பணம் செலவிட்டுள்ளது என தெரிவித் துள்ளது.

ரூ.2.86 கோடி செலவு

இதுகுறித்த டி.நரசிம்ம மூர்த்தி, ‘தி இந்து’விடம் கூறிய தாவது, ‘தமிழக முதல்வர் ஜெய லலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கிற்கு கர்நாடக அரசு கடந்த 2003-04 நிதி ஆண்டில் இருந்து ஒவ்வொரு நிதி ஆண்டிலும் ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை ஒதுக்கியுள்ளது.

தொலைபேசி கட்டணங்கள், சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வந்தது, அதற்கான பயண செலவு, பாதுகாப்பு போலீஸாருக்கான ஊதியம் என கடந்த 11 ஆண்டுகளில் ஜெயலலிதாவின் வழக்கிற்காக கர்நாடக அரசு ரூ.2 கோடியே 86 லட்சத்து 99 ஆயிரத்து 616 செலவு செய்துள்ளது. இதில் தமிழக அரசு ரூ.1.46 கோடியை கர்நாடக அரசுக்கு செலுத்தியுள்ளது. மீதமுள்ள ரூ.1.40 கோடியை இன்னும் செலுத்தவில்லை. ஒருவேளை செப்டம்பர் 20-ம் தேதி தீர்ப்பு வெளியான பிறகு செலுத்தும் என எதிர்பார்க்கிறேன்.

கர்நாடகத்தில் கீழ் நீதிமன் றத்தில் நடைபெற்ற ஒரு வழக்குக்காக ரூ.2.86 கோடி செலவானது இதுவே முதல் முறை. குடிமக்களின் வரிப்பணத்தில் பெரும் தொகையை, அதிகாரத்தில் இருக்கும் ஒருவரின் வழக்குக்காக விரயம் செய்தது நியாயம் அல்ல. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்றாலும் கூட, கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் கால விரயமும், ரூ.2.86 கோடி மக்களின் வரிப்பணம் விரயமும் ஏற்க முடியாத ஒன்று.

இதே போல தமிழக அரசு 1996-ம் ஆண்டில் இருந்து 2003-ம் ஆண்டு வரை இவ்வழக்கிற்காக எவ்வளவு பணம் செலவு செய்துள்ளது என்பது குறித்தும் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டுள்ளேன். அந்த தகவல் கிடைத்ததும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்வேன்’’என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x