Published : 12 Feb 2019 12:59 PM
Last Updated : 12 Feb 2019 12:59 PM

சிபிஐ அதிகாரி நாகேஸ்வர ராவுக்கு ரூ. 1 லட்சம் அபராதம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு

பிஹார் காப்பக வழக்கை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவ் நீதிமன்ற அவமதிப்பு செய்ததை உறுதி செய்யுள்ள உச்ச நீதிமன்றம், அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவு பிறபித்துள்ளது.

சிபிஐ அமைப்பின் மூத்த அதிகாரிகளிடையே மோதல் ஏற்பட்ட விவகாரம் கடந்த அக்டோபர் மாதத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவும் கட்டாய விடுப்பில் அனுப்பபட்டு நள்ளிரவிலேயே நாகேஸ்வர ராவை தற்காலிக சிபிஐ இயக்குநராகவும் மத்திய அரசு நியமித்தது.

இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், சிபிஐ இயக்குநராக ரிஷி குமார் சுக்லா நியமிக்கப்பட்டார். நாகேஸ்வர ராவ் சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்தபோது, பிஹார் மாநிலம், முசாபர்பூர் சிறுமிகள் காப்பகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை விசாரித்து வந்த சிபிஐ இணை இயக்குனர் ஏ.கே.சர்மாவை, மத்திய ரிசர்வ் காவல் படைக்கு சர்மாவை இடமாற்றம் செய்து கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டார்.  

இதை எதிர்த்து ஏ.கே.சர்மா வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நாகேஸ்வர ராவுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு தனது பதிலை பிரமாண பத்திரமாக, நாகேஸ்வர ராவ் தாக்கல் செய்தார். அதில், தனது தவறை உணர்ந்து கொண்டேன் என்றும் இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கிறேன் என்று கூறி இருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் வழக்கறிஞர் கே.கே வேணுகோபால் ஆஜராகி சிபிஐ அதிகாரியை இடமாற்றம் செய்த விவகாரத்தில் வேண்டுமென்றே நாகேஸ்வர ராவ் நடந்து கொள்ளவில்லை, நடந்த தவறுக்காக வருத்தம் தெரிவித்துள்ளார் என வாதிட்டார்.

பின்னர் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு உத்தரவில் தெரிவித்ததாவது:

‘‘உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை வேண்டுமென்றே மீறிய சிபிஐ அதிகாரியின் முறையீட்டை ஏற்க முடியாது. நீதிமன்றத்தின் உத்தரவை அவர் மீறி இருப்பது தெளிவாகிறது. எனவே அவரது குற்றத்தை இந்த நீதிமன்றம் உறுதி செய்கிறது. அவர் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அவர் ஒரு நாள் முழுவதும் நீதிமன்ற அறையில் அமர்ந்து இருக்க வேண்டும். இதுபோல சட்ட ஆலோசகருக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது’’ எனக் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x