Last Updated : 24 Jan, 2019 05:59 PM

 

Published : 24 Jan 2019 05:59 PM
Last Updated : 24 Jan 2019 05:59 PM

வாக்குச்சீட்டு காலக்கட்டத்துக்கு மீண்டும் செல்லும் பேச்சுக்கே இடமில்லை: தலைமைத் தேர்தல் ஆணையர் அரோரா திட்டவட்டம்

மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தைத் தேர்தல் வாக்குப்பதிவுகளுக்காகப் பயன்படுத்துவதன் மீதான கடும் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் இனி மீண்டும் வாக்குச்சீட்டு காலக்கட்டத்துக்குப் போகும் பேச்சுக்கே இடமில்லை என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

 

தேர்தல் ஆணையத்தை எதிரப்பாளர்களின் வார்த்தைகள் அச்சுறுத்தவோ, சலனப்படுத்தவோ முடியாது என்று கூறிய சுனில் அரோரா, “மீண்டும் ஒருமுறை தெளிவுப் படுத்த விரும்புகிறேன். நான் மட்டுமல்ல, கடந்த இந்திய தேர்தல் ஆணையமாயினும் எதிர்கால இந்திய தேர்தல் ஆணையமாயினும் வாக்குச்சீட்டு என்ற முந்தைய நடைமுறைக்குத் திரும்பச் செல்லுதல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

 

வாக்குச்சீட்டுக் காலக்கட்டத்தில் கட்சிகளின் குண்டர்கள் வாக்குப்பெட்டியைக் களவாடிச் செல்வது போன்ற சம்பவங்கள் நிகழந்தன. மேலும் வாக்கு எண்ணிக்கையும் தாமதமானது மேலும் வாக்குச்சாவடி ஊழியர்களை மேலும் துன்புறுத்த முடியாது” என்று புதுடெல்லியில் நடைபெற்ற  சர்வதேச மாநாட்டில் வெள்ளிக்கிழமையன்று தெள்ளத் தெளிவாகக் கூறியுள்ளார் சுனில் அரோரா.

 

விமர்சனத்துக்கு திறந்தமனதுடன் இருக்கிறோம்:

 

அரசியல் கட்சிகள் உட்பட இது குறித்த விமர்சனங்களையும், பின்னூட்டங்களையும், ஆலோசனைகளையும் வரவேற்கிறோம். ஆனால் அதே வேளையில் எங்களை அச்சுறுத்தவோ எங்களுக்கு அழுத்தமோ கொடுக்க முடியாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தை நாம் ஏன் கால்பந்து போல் ஆக்கிவிட்டோம் அதற்கு எதிராக ஏன் முஷ்டியை மடக்க வேண்டும்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

 

அயல்நாட்டு சைபர் நிபுணர் ஒருவர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என்றும் 2014 லோக்சபா தேர்தல்களில் மோசடி நடந்துள்ளது என்றும் கூறியது பரபரப்பானது. இதனையடுத்து தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டதற்கிணங்க டெல்லி போலீஸ் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தது. அவர் கூறியதையடுத்து வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் வாக்குச்சீட்டுகளையே பயன்படுத்த வேண்டும் என்று பலத்த கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

 

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துக்கே ஆதரவு:

 

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்தான் திறம்பாடானது என்று கூறும் தேர்தல் ஆணையர் 2014 தேர்தலில் ஒரு முடிவு, பிறகு 4 மாதங்கள் சென்ற பிறகு டெல்லி மாநிலத் தேர்தலில் வேறு முடிவு வரவில்லையா?

 

அதன் பிறகு இமாச்சலம், குஜராத், கர்நாடகா, திரிபுரா, நாகாலாந்து, மிஜோரம், தற்போது சத்திஸ்கர், மத்தியபிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.  தேர்தல் முடிவுகளும் வித்தியாசமாகவே வந்துள்ளது. என்னுடைய அடிப்படை கேள்வியென்னவெனில், தேர்தல் முடிவு சாதகமாக வரும்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் சரி, மாறிப்போனால் அது தவறு என்று எப்படி கூற முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.

 

மேலும் வாக்காளர்கள் தாங்கள் வாக்களித்த சின்னத்தில்தான் வாக்குப் பதிவாகியுள்ளதா என்பதை கண்டறியும் பேப்பர் ட்ரெய்ல் உற்பத்தியில் இரண்டு பொதுத்துறை நிறுவனங்களான பாரத் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆகியவை ஈடுபட்டுள்ளன. இவை பலத்த பாதுகாப்புடன் கூடியது. ஏனெனில் இவர்கள் பாதுகாப்புத் துறைக்காக பணியாற்றுபவர்கள்.

 

ஆகவே மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்திலிருந்து மீண்டும் பழைய வாக்குச்சாவடி முறைக்குத் திரும்பும் பேச்சுக்கே இடமில்லை என்று தேர்தல் ஆணையர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x