Published : 28 Jan 2019 05:54 PM
Last Updated : 28 Jan 2019 05:54 PM

ஐஆர்சிடிசி ஹோட்டல் ஊழல் வழக்கு: லாலு பிரசாத், மனைவி, மகனுக்கு நீதிமன்றம் ஜாமீன்

ஐஆர்சிடிசி ஹோட்டல் ஊழல் வழக்கில் ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவரும் முன்னாள் ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி மற்றும் அவரது மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

ரயில்வே ஓட்டல் பராமரிப்பில் ஊழல்

2004 முதல் 2009 வரை லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ராஞ்சி மற்றும் பூரி ஆகிய இடங்களில் ஐஆர்சிடிசி ஹோட்டல்களைப் பராமரிப்பதற்காக ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஒரு ஒப்பந்தத்தை அனுமதித்ததில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இந்திய ரயில்வேயின் இரு  ஹோட்டல்களின் பராமரிப்பு, பாதுகாப்பு ஆகியவற்றை மேற்கொள்ள சுஜாதா ஹோட்டல் எனும் தனியார் லிமிடெட் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டதன் பின்னணியில் மிகப்பெரிய ஊழல் பரிமாற்றத்திற்கான சதித் திட்டம் தீட்டியதாக இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த ஊழல் தொடர்பாக, லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மனைவி, இவர்களுடன் டெல்லியில் இயங்கிவரும் ஒரு தனியார் நிறுவனம், ஒரு தனியார் ஹோட்டலின் இரண்டு இயக்குநர்கள், இது தவிர ஐஆர்சிடிசியின் நிர்வாக இயக்குநர், ஒரு எம்.பி., ஐஆர்சிடிசியில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் மற்ற உயரதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்த வழக்கில் லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி மற்றும் அவரது மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

சிறப்பு நீதிபதி அருண் பரத்வாஜ் மூவருக்கும் தலா ரூ.1 லட்சம் பிணைத்தொகையில் ஜாமீன் வழங்கினார்.

முன்னதாக, இதே வழக்கில் உயர் நீதிமன்றம் ஜனவரி 19-ம் தேதி அன்று, மூவருக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கியிருந்தது. அது இன்றோடு (திங்கட்கிழமை) முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x