Last Updated : 04 Jan, 2019 12:40 PM

 

Published : 04 Jan 2019 12:40 PM
Last Updated : 04 Jan 2019 12:40 PM

பாதிரியார்களின் பாலியல் இச்சைகளுக்கு ஆளாகும் கன்னியாஸ்திரிகள்: ஆய்வு விசாரணையில் அதிர்ச்சி உண்மைகள்

இந்தியா முழுவதும் பாதிரியார்களால் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் கன்னியாஸ்திரிகள் குறித்தும், அவர்களின் நேரடி அனுபவங்கள் குறித்தும் செய்தி நிறுவனமான ஏபி சார்பில் ஓர் ஆய்வு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் இதோ:

பாதிரியார்கள் அவர்களின் அந்தரங்க அறைக்குள் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதையும் பாலியல் உறவுக்கு உட்படுமாறு வற்புறுத்தியதையும் கன்னியாஸ்திரிகள் நம்முடன் பகிர்கின்றனர்.

யேசு பிரானின் தூதர்கள் என்று நம்பிய பாதிரியார்களே தங்களின் உடலில் அத்துமீறிக் கை வைத்ததையும் இன்னும் பிறவற்றையும் பல்வேறு தேவாலயங்களில் பணிபுரியும் கன்னியாஸ்திரிகள் தயங்கித் தயங்கி நம்முடன் பேச ஆரம்பிக்கின்றனர்.

தனது கதையை ஆரம்பிக்கும் கன்னியாஸ்திரி ஒருவர், ''அவர் குடித்திருந்தார்'' என்று தொடங்குகிறார். ''எப்படி முடியாது என்று சொல்வது எனத் தெரியவில்லை'' என்கிறார் மற்றொருவர். சில நிமிடங்களிலேயே தயக்கம் விடுபட்டு தொடர்ச்சியாக நடந்த பாலியல் பலாத்காரங்கள் குறித்து கன்னியாஸ்திரிகள் பேசினர்.

கத்தோலிக்க தலைமை, தங்களைக் காப்பதில் அதிக சிரத்தை எடுத்துக் கொள்வதில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

ஆசியா, ஐரோப்பா, தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் கன்னியாஸ்திரிகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய பாதிரியார்கள் மற்றும் பேராயர்கள் குறித்து வாடிகன் நிர்வாகத்துக்குத் தெரியும் என்றும் அதை நிறுத்த குறைந்த அளவிலான முயற்சிகளையே வாட்டிகன் எடுத்தது எனவும் கடந்த ஆண்டின் அறிக்கை ஒன்று கூறுகிறது.

ஏபி மேற்கொண்ட விசாரணையில், சில கன்னியாஸ்திரிகள், ''பாலியல் துஷ்பிரயோகம் எல்லா இடத்திலும் வழக்கமான ஒன்றுதான்'' என்று நினைக்கின்றனர். சிலர், ''அரிதான ஒன்று'' என்கின்றனர். யாரும் இதுகுறித்து வெளிப்படையாகப் பேசத் தயாராக இருப்பதில்லை. பெரும்பாலானோர் தங்களின் அடையாளம் மறைக்கப்பட வேண்டும் என்ற விதியின் பேரில் பேச ஆரம்பிக்கின்றனர்.

போராட்டமும் அதன் விளைவுகளும்

கடந்த ஆண்டில், கேரள மாநிலத்தில் கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டில் பேராயர் பிராங்கோ மூலக்கல் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். ஆனால் அதற்கு முன்பாக அந்தக் கன்னியாஸ்திரி எதிர்கொண்ட பிரச்சினைகள் ஏராளம்.

கடந்த 2014 முதல் 2016 வரை கோட்டயம் அருகே குருவிளங்காடு பகுதியில் உள்ள தேவாலயத்தில் பணியாற்றியவர் பாதிரியார் பிராங்கோ மூலக்கல். இவர், தான் பணியாற்றிய காலத்தில் கன்னியாஸ்திரி ஒருவரை மிரட்டி 13 முறை பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி அப்போது தேவாலய நிர்வாகிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி குருவிளங்காடு போலீஸில் புகார் செய்தார்.

குற்றச்சாட்டுக்கு ஆளான பாதிரியார் பிராங்கோ மூலக்கல், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பேராயராக இருந்து வருகிறார். ஆனால், கன்னியாஸ்திரி கூறும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது, பொய்யானது என்று பிராங்கோ மறுத்து வந்தார்.

புகார் அளித்து 70 நாட்கள் ஆகியும் பேராயர் கைது செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டிய கன்னியாஸ்திரிகள் 5 பேர் 14 நாட்கள் போராட்டம் நடத்தினர். உலகின் கவனத்துக்கு இந்நிகழ்வு வந்ததும் பாதிரியார் கைதானார்.

இதுகுறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டவரான சிஸ்டர் ஜோசபின் வில்லோனிக்கல் கூறும்போது, ''எங்களில் சிலரே நாங்கள் சர்ச்சுக்கு எதிராகப் பணிபுரிகிறோம் என்றனர். இன்னும் சிலர் நாங்கள் சாத்தானை வழிபடுவதாகக் கூறினர்'' என்றார்.

 IN02INDIAPRIESTSPREYINGONNUNS1jpgசிஸ்டர் ஜோசபின் வில்லோனிக்கல் மற்ற சகோதரிகளோடு. படம்: ஏபி.100

 

'நீங்கள் நிதானத்தில் இல்லை'

டெல்லியின் வறுமையான பகுதிகளில் பணியாற்றி வரும் கன்னியாஸ்திரி ஒருவரிடம் பேசியபோது, ''15 ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு தேவாலயத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அந்தப் பாதிரியாருக்கு என் மேல் ஈர்ப்பு இருந்தது போல உணர்ந்தேன்.

ஒரு நாள் பார்ட்டிக்குச் சென்ற பாதிரியார் இரவு தாமதமாக வந்தார். 9.30 மணிக்கு மேல் இருக்கும். என்னுடைய அறையைத் தட்டினார். ''உன்னைப் பார்க்க வேண்டும். உன்னுடைய ஆன்மிக வாழ்க்கை குறித்துப் பேச வேண்டும்' என்றார். நான் கதவைத் திறக்கவில்லை. வலுக்கட்டாயமாகத் தள்ளிக் கதவைத் திறந்தார். என்னால் ஆல்கஹால் வாசனையை உணர முடிந்தது.

''நீங்கள் நிதானத்தில் இல்லை. உங்களுடன் பேசத் தயாராக இல்லை'' என்றேன். முத்தம் கொடுக்க முயன்றார். எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தொட்டார். அவரை வேகமாகத் தள்ளிவிட்டுவிட்டு கதவைப் பூட்டினேன்.

அது பாலியல் பலாத்காரம் இல்லை என்றாலும் அது ஓர் அச்சுறுத்தும் நிகழ்வாக இருந்தது. இதுகுறித்து என்னுடைய மூத்த கன்னியாஸ்திரியிடம் சொன்னேன். அவர், பாதிரியாருடன் மீண்டும் சந்திப்புகள் நிகழாத வண்ணம் பார்த்துக்கொண்டார். நடந்தவை குறித்து, சர்ச் அதிகாரிகளுக்கு அநாமதேயக் கடிதம் எழுதினேன். ஆனால் எதுவும் நடக்கவில்லை'' என்றார்.

புனிதத்துக்கும் வேட்டையாடலுக்கும் இடையில்...

கத்தோலிக்க வரலாறு முழுவதும் பெண்கள் தங்களுடைய புனிதத் தன்மையைக் காத்துக் கொள்வதற்காக, தியாகிகளாக மாறி உயிர் துறந்த சம்பவங்களால் நிரம்பியிருக்கிறது.

புனிதர் அகதா, திருமணம் செய்துகொள்ள மறுத்ததால், மார்பகங்களைக் கிழித்துக் கொல்லப்பட்டார். தனது புனிதத்தன்மையைக் காத்ததற்காக புனிதர் லூசி, உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ஒருவரால் புனிதர் மரியா கொரேட்டி, 11 வயதில் கொல்லப்பட்டார்.

''இது புனிதத்துக்கும் வேட்டையாடலுக்கும் இடையிலான போராட்டம்'' என்கிறார் டெல்லியைச் சேர்ந்த தத்துவவியல் அறிஞர் ஷாலினி மூலக்கல்.

ஏன் கன்னியாஸ்திரிகள் புகார் அளிப்பதில்லை?

பாதிரியாருக்கு எதிராகப் புகார் கொடுப்பது என்றால் தேவாலய நிர்வாகத்தில் நமக்கு மேலாக இருப்பவர் மீது குற்றம் சமத்துவது. இது ஏராளமான வதந்திகளுக்கும் தேவாலய அரசியலுக்கும் வழிவகுக்கும். இது உங்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கலாம்.

அதுமட்டுமல்லாமல் மத ரீதியான அரசியல், பெண்கள் என்றாலே குறைச்சலாக மதிப்பிடும் நம்பிக்கை உள்ளிட்டவை கன்னியாஸ்திரிகளின் அமைதிக்கு ஊக்கம் அளித்துவிடுகின்றன. இன்னும் சில கன்னியாஸ்திரிகளோ, தங்களது புகார், தாங்கள் சார்ந்துள்ள தேவாலயத்தின் பெயரைக் குலைக்கும் என்றும் இந்துத்துவ அமைப்புகளின் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டும் எனவும் அஞ்சுகின்றனர்.

குடிபோதையில் இருந்த பாதிரியாரை எதிர்கொண்ட கன்னியாஸ்திரி, ''நான் உண்மையைச் சொன்னால், தனிமைப்படுத்தப் படுவேனோ என்ற பயம்தான் வெளியே சொல்லாததற்கு முக்கியக் காரணம். பாதிரியார்களுக்கு எதிராகப் புகார் அளிக்கும்போது, தங்களின் சொந்த மதத்தினரையே, தங்களின் மத உயரதிகாரிகளையே எதிர்க்க வேண்டி வருகிறது'' என்கிறார்.

கன்னியாஸ்திரி ஷாலினி மூலக்கல் மேலும் கூறும்போது, ''நாங்கள் கன்னியாஸ்திரிகளாகவே இருந்தாலும் கூட, அமைதியாக இருக்கவே முயற்சிக்கிறோம். பாலியல் அனுபவங்களை எதிர்கொள்ளும் பெண், அதை மறைத்து எல்லாம் சரியாக இருக்கிறது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தவே முயல்கிறாள்'' என்றார்.

இவ்வாறு ஏபி மேற்கொண்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படங்கள்: ஏபி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x