Last Updated : 13 Jan, 2019 10:55 AM

 

Published : 13 Jan 2019 10:55 AM
Last Updated : 13 Jan 2019 10:55 AM

மாயாவதி, அகிலேஷ் கூட்டணியால் வருத்தமில்லை: முடிவில் பாஜக ஆட்சிக்கு வராது: ராகுல் காந்தி பேச்சு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரும் மக்களவைத் தேர்தலுக்கு மாயாவதி, அகிலேஷ் யாதவ் கூட்டணி அமைத்தது குறித்து நான் வருத்தப்படவில்லை, ஆனால்,முடிவில் பாஜக ஆட்சிக்கு வரப்போவதில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

விரைவில் வரும் மக்களவைத் தேர்தலில் உ.பி.யில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதிக் கட்சி இணைந்து போட்டியிடும் என்று அந்தக் கட்சிகளின் தலைவர்களாக மாயாவதி, அகிலேஷ் யாதவ் கூட்டாக நேற்று அறிவித்து, காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட்டனர்.

இந்நிலையில், துபாயில் 2 நாட்கள் பயணத்தில் இருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம், மக்களவைத் தேர்தலில் அகிலேஷ் யாதவ், மாயாவதி அறிவிப்பு குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு ராகுல் காந்தி அளித்த பதில்

அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகிய இரு தலைவர்கள் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். இரு கட்சிகளின் தலைவர்களும், அவர்களுக்கு விருப்பமான முடிவை அவர்கள் எடுக்க உரிமை இருக்கிறது. கூட்டணி அமைக்கவும் உரிமை இருக்கிறது. அதேசமயம், காங்கிரஸ் கட்சி உ.பி. மக்களிடம் எங்களால் சிறப்பான முறையில் சென்று வாக்குக் கேட்போம், எங்கள் சித்தாந்தங்களை மக்களுக்கு தெரிவித்து, எங்கள் முழு வலிமையையும் வெளிப்படுத்தித் தேர்தலில் போட்டியிடுவோம்.

பகுஜன் சமாஜ், சமாஜ்வாதிக் கட்சி ஆகியவை அரசியல் ரீதியான முடிவுகளை எடுத்துள்ளன. எங்களைப் பொருத்தவரை இனிமேல், உ.பி.யில் கட்சியை எவ்வாறு வலுப்படுத்த வேண்டும் என்பதில் தீவிரமாக கவனம் செலுத்துவோம், முழு வலிமையுடன் போரிடுவோம்.

எங்களால் முடிந்தவரை மக்களை எங்கள் பக்கம் திரட்டி, வரும் மக்களவைத் தேர்தலில் நாங்கள் சில தொகுதிகளில் அதிர்ச்சிகரமான முடிவுகளையும் அளிப்போம்.

மாயாவதியும், அகிலேஷ்யாதவும் இணைந்தது காங்கிரஸ் கட்சிக்கு ஒருபோதும் பின்னடைவை ஏற்படுத்தாது. அது குறித்து நான் கவலைப்படவும் இல்லை, ஆனால், நீண்டகாலத்தின் முடிவில் பாஜக ஆட்சிக்கு வராது.

காங்கிரஸ் கட்சியைக் குறித்து அவர்கள் இருவரும் சில தவறுகளை சுட்டிக்காட்டிப் பேசினார்கள், இதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஏனென்றால், தவற்றை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையில் பணியாற்றுகிறோம். எங்களுடைய கட்சி கூட்டணியில் இருந்து போட்டியிடுகிறதா அல்லது தனியாக போட்டியிடுகிறதா என்பதல்ல விஷயம், முடிவு ஒரேமாதிரியாக இருக்கும், அதாவது, பாஜகவுக்கு எந்த இடமும் கிடைக்காது.

2019-ம் ஆண்டை ஐக்கிய அரபு நாடு சகிப்புத்தன்மை ஆண்டாக கடைபிடிக்கிறது. இந்தியாவும் கூட சகிப்புத்தன்மையை கொண்டாடுகிறது, நம்புகிறது. ஆனால், இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்தபின் சகிப்பின்மை அதிகரித்து, பல்வேறு நிறுவனங்களைச் சிதைத்து, அழித்துவருவதால், இந்தியாவின் பாதையில் சிறிய அளவிலான மாறுதல் ஏற்பட்டுள்ளது. இது தற்காலிகமான ஒரு தடைதான், வரும் பொதுத்தேர்தலுக்கு பின் மாற்றமடையும், சகிப்புத்தன்மை பாதுகாக்கப்படும்.

நாட்டில் ஒவ்வொரு அமைப்பும் அரசால் சிதைக்கப்படுகிறது, ஆர்எஸ்எஸ், பாஜகவின் சிந்தனையைப் பொருத்தவரை, இந்தியாவில் ஒரு அமைப்பு மட்டும்தான் இருக்க வேண்டும், அது ஆர்எஸ்எஸ் மட்டும்தான். அதனால்தான் ஒவ்வொரு அரசு அமைப்பிலும் தங்களின் சார்பில் வேண்டியவர்களைப் புகுத்துகிறார்கள். கல்லூரிகள், பல்கலை, சிபிஐ, தேர்தல் ஆணையம் என ஒவ்வொரு அமைப்புக்கும் அழுத்தம் தரப்படுகிறது.

மக்களின் குரல் என்பது தொடர்பில்லாதது, தேவையில்லாதது என ஆர்எஸ்எஸ் நினைக்கிறது. 2019-ம் ஆண்டு தேர்தலில் நாங்கள் வெற்றிபெறுவோம் என்று நான் கூறுவதற்கு முக்கியக் காரணம், அதிகாரிகள், அமைப்புகளிடம் இருந்து இந்த அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்கள் தொடர்ந்து எங்களுக்கு வருகின்றன, இந்த அரசின் செயல்பாடுகளை அவர்கள் ஏற்கத் தயாராக இல்லை என்று கூறுகிறார்கள்.

நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்க பாஜக அரசு தவறிவிட்டது, பணமதிப்பிழப்பு எனும் மிகக்கொடூரமான நடவடிக்கையை, பொறுப்பற்றமுறையில் மோடி எடுத்துள்ளார். நாட்டில் உள்ள அமைப்புசாரா தொழில்கள் அழிந்துபோக மறைமுகமாகக் காரணமாகிவிட்டார் பிரதமர் மோடி.

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபின், மோடி அரசினஅ தாக்குதலில் சிக்கி இருக்கும், ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றை மீட்டெடுப்போம்

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x