Published : 01 Jan 2019 06:44 PM
Last Updated : 01 Jan 2019 06:44 PM

‘‘உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகே ராமர் கோயில் தொடர்பான சட்டம்’’ -மவுனம் கலைத்தார் பிரதமர் மோடி

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அமைப்புகள் வலியுறுத்தி வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி முதன்முறையாக பேசியுள்ளார். நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவுக்கு வந்த பிறகே சட்டம் கொண்டுவரப்படும் என அவர் கூறியுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் என இந்து அமைப்புகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் விசாரணையை எப்போது தொடங்குவது என்பது குறித்து இந்த வாரம் முடிவு செய்யப்படுகிறது. நீண்டகாலமாக வழக்கு நிலுவையில் இருப்பதால் அதற்கு தீர்வு காண வேண்டும் என இந்து அமைப்புகள் கோரி வருகின்றன. இந்த சூழ்நிலையில் புத்தாண்டு தினமான இன்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் என்பது மக்களுக்கும், எதிர்க்கட்சிகள் சேர்ந்து அமைக்கும் மெகா கூட்டணிக்கும் இடையே நடக்கும் தேர்தல். இதில் சரியான முடிவை மக்கள் நிச்சயம் எடுப்பார்கள்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரத்தை பொறுத்தவரை, நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக காத்திருக்கிறோம். நீதிமன்ற நடவடிக்கை முடிந்த பிறகே அரசு தனது பணியை தொடங்க முடியும். அதன் பிறகே சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே இந்த விவகாரத்தில் அவசரப்படவில்லை. இந்த விவகாரத்தில் சட்டத்துக்குட்பட்டே தீர்வு காணப்படும் என கடந்த தேர்தல் அறிக்கையில் நாங்கள் தெளிவாக தெரிவித்துள்ளோம். எனவே நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறோம்.

அதேசமயம் ராமர் கோயில் விவகாரத்தில் காங்கிரஸ் வேண்டுமென்ற தலையிட்டு நீதிமன்ற நடவடிக்கைகளை தாமதப்படுத்துகிறது. நீதிமன்ற நடவடிக்கைகள் உரிய காலத்தில் முடிய விடாமல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ஆஜராகி தாமதப்படுத்துகின்றனர்.

ரிசரவ் வங்கி ஆளுநர்  உர்ஜித் படேல் பதவி விலகியதில் அரசியல் நிர்பந்தம் எதுவும் இல்லை. உர்ஜித் படேல் சிறப்பாக பணியாற்றினார். தனிப்பட்ட காரணங்களுக்காக பணியில் இருந்து விலகுவதாக அவர் கேட்டு கொண்டார். சில மாதங்களுக்கு முன்பே அவர் இதனை என்னிடம் தெரிவித்தார்.

ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட துல்லிய தாக்குதல் மிகப்பெரிய சாதனை. இதில் நமது தரப்பில் இழப்பு ஏற்படாமல் சாதர்யமாக, அதேசமயம் எதிரிகளின் இலக்கை தகர்த்துள்ளோம்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x