Published : 02 Jan 2019 02:57 PM
Last Updated : 02 Jan 2019 02:57 PM

தெலங்கானாவில் காங்கிரஸுக்கு பின்னடைவு; சந்திரசேகர் ராவ் கட்சியில் இணைகிறார் அசாருதீன்?

தெலங்கானா மாநில காங்கிரஸ் செயல் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான அசாருதீன் ஆளும்  தெலங்கானா ராஷ்டிர சமிதியில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தலில் அவர் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிடுவார் எனவும் தெரிகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் காங்கிரஸ் கட்சியில் இணைந்து எம்.பியானார். 2009-ம் ஆண்டில் உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் 2014-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் மதோபூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

அசாருதீன் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்.  மக்களவை தேர்தலில் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட அவர் விரும்பினார். எனினும் காங்கிரஸ் தலைமை தன்னை ஒதுக்கி வைத்திருப்பதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சமீபத்தில் தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தநிலையில், அவரை காங்கிரஸ் தலைமை சமாதானம் செய்தது. தெலுங்கானா மாநில காங்கிரஸ் செயல்தலைவராக அசாருதீன் நியமிக்கப்பட்டார். மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மல்ஜாஜ்கிரி தொகுதியில் அவரை களமிறக்கவும் காங்கிரஸ் தலைமை திட்டமிட்டு வந்தது.

இந்தநிலையில் அவர் காங்கிரஸில் இருந்து விலகி தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி பெரும் வெற்றி பெற்றது. இதனால் மக்களவைத் தேர்தலில் தெலங்கானாவில் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பு குறைந்துள்ளதாக கருதப்படுகிறது.

இந்தசூழ்நிலையில், மஜ்லிஸ்-இ-இத்ஹாதுல் முஸ்லிமன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவர் அஸாதுதீன் ஒவைசி இல்ல திருமணம் சமீபத்தில் நடந்தது. ஒவைசி  நெருங்கிய நண்பர் என்பதால் அசாருதீனும் அந்த திருமணத்தில் கலந்து கொண்டார்.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் , அவரது மகன்  கே.டி. ராமாராவ், மகளும் எம்.பி.யுமான கவிதா உள்ளிட்டோரும் திருமணத்தில் பங்கேற்றனர். அப்போது சந்திரசேகர் ராவ் குடும்பத்தினரை அசாருதீன் சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக அவர் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் இணைய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் தெலங்கானா ராஷ்டிர சமதி சார்பில் செகந்திராபாத் மக்களவை தொகுதியில் போட்டியிடலாம் எனவும் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து அசாருதீன் தரப்பில் இதுவரை எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x