Published : 28 Jan 2019 11:55 AM
Last Updated : 28 Jan 2019 11:55 AM

இரவு நேரப் பணியால் ஏற்படும் டிஏன்ஏ கோளாறு: கேன்சர், இதய நோய்களுக்கு வழிவகுக்கும்

''இரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்'' என்று சமீபத்தில் வெளியான ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனஸ்தீசியா ஜர்னலில் இதுதொடர்பான ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஹாங்-காங்கைச் சேர்ந்த பேராசியர்கள் இந்த ஆய்வை நடத்தினர். ஆய்வுக்காக நல்ல உடல்நலத்துடன் உள்ள 49 முழு நேர மருத்துவர்களின் மருத்துவ மாதிரிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன.

ஆய்வு முடிவுகளின் சுருக்கமான விவரம் பின்வருமாறு:

''மருத்துவமனையிலோ, வெளியிலோ இரவு முழுவதும் பணியாற்றும் மருத்துவர்களின் டிஏன்ஏவைப் புதுப்பிக்கும் மரபணுக்கள் (DNA repair gene expression) குறைவாகவே வேலை செய்தன. அதேபோல அவர்களின் டிஏன்ஏக்கள் இரவுகளில் வேலை செய்யாதவர்களை விட அதிகமாக சேதமுற்றன.

தொடரும் தூக்கமின்மை காரணமாக, டிஏன்ஏவைப் புதுப்பிக்கும் மரபணுக்களின் எண்ணிக்கை குறைந்து அவற்றின் சேதம் அதிகமாகத் தொடங்குகிறது. ஒரே ஒரு நாள் இரவு தூங்காமல் இருந்தாலும் டிஎன்ஏ சேதமாகும் அபாயம் அதிகரிக்கிறது.

இந்த சேதம் பல்வேறு நோய்களுக்கு வித்திடலாம். குறிப்பாக கேன்சர், இதய நோய்கள், நரம்பியல் தொடர்பான பிரச்சினைகள், வளர்சிதை மாற்றங்களில் ஏற்படும் கோளாறுகள் ஆகியவைக்கு தூக்கமின்மை முக்கியக் காரணமாக அமையும்''.

இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவரான ஹாங் காங் பல்கலைக்கழக பேராசிரியர் சியு-வாய் சோய் கூறும்போது, ''இந்த சோதனையின் முடிவுகள் ஆரம்பக் கட்டத்தில் எடுக்கப்பட்டவைதான். எனினும் தூக்கமின்மையும் குறைவான தூக்கமும் நாள்பட்ட நோய்களின் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் காரணிகளுக்கு உதவும் என்பது சோதனையில் உறுதியாகி உள்ளது'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x