Last Updated : 17 Jan, 2019 04:18 PM

 

Published : 17 Jan 2019 04:18 PM
Last Updated : 17 Jan 2019 04:18 PM

தலைநகரில் துணிகரம்: ஜம்மு-டெல்லி துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலில் கத்திமுனையில் பயணிகளிடம் கொள்ளை

டெல்லியில், ஜம்மு-டெல்லி துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏசி பெட்டியில் பயணித்த பயணிகளிடம் கத்தி முனையில் அடையாளம் தெரியா நபர்கள் இன்று நகைகள், பணம், விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்துத் தப்பினார்கள்.

சிக்னலுக்காக ரயில் நின்றிருந்த நேரத்தில் ரயிலின் இரு பெட்டிகளின் கதவைத் திறந்து பயங்கர ஆயுதங்களுடன் ஏறிய மர்மநபர்கள், 10 முதல் 15 நிமிடங்களில் ஒட்டுமொத்த கொள்ளை சம்பவங்களையும் முடித்துவிட்டனர்.

கொள்ளை நடந்து முடிந்து மர்மநபர்கள் தப்பிச் சென்றபின் அதில் பயணம் செய்த பயணி ஒருவர் போலீஸாருக்கு ரயில்வே புகார் செயலி மூலம் அளித்த தகவலுக்குப் பின்புதான் ரயிலில் கொள்ளை நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

இது குறித்து ரயில் போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது:

டெல்லியில் உள்ள சராய் ரோஹிலா ரயில் நிலையத்துக்கு அருகே ஜம்மு-டெல்லி துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் வந்தபோது சிக்னல் கிடைக்காமல் அதிகாலை 3.30 மணி அளவில் பாதியிலேயே நின்றுவிட்டது. அப்போது, ரயிலில் உள்ள பி3,பி7 ஆகிய இரு ஏசி பெட்டிகளில் 7 முதல் 10 பேர் வரையிலான மர்ம நபர்கள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஏறியுள்ளனர்.

பயணிகளின் கழுத்தில் கத்திவைத்து மிரட்டி அவர்களிடம் இருந்த நகைகள், பணம், ஏடிஎம் கார்டு, செல்போன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்துக்கொண்டு 10 முதல் 15 நிமிடங்களுக்குள் அங்கிருந்து தப்பிவிட்டனர்.

கொள்ளையர்கள் குறித்த சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதை வைத்து தீவிரமாக தேடிவருகிறோம். விரைவில் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

ரயில்வே போலீஸாருக்கு செயலி மூலம் புகார் அளித்த பயணி அஸ்வானி குமார் கூறுகையில், “ இன்று அதிகாலை 3.30 மணியளவில் சிக்னலுக்காக ரயில் நின்றிருந்த போது, பெட்டியில் 7 முதல் 10 பேர் வரை முகத்தை மூடிக்கொண்டு பயங்கர ஆயுதங்களுடன் ஏறினார்கள்.

பயணிகளின் கழுத்தில் கத்தியைவைத்து மிரட்டி அவர்களிடம் இருந்த பர்ஸ், பணம், நகைகள், செல்போன், ஏடிஎம் கார்டு ஆகிவற்றை கொள்ளையடித்து 15 நிமிடங்களில் அங்கிருந்து தப்பினார்கள். இந்தச் சம்பவம் நடக்கும்போது, ரயில்வே போலீஸார், பாதுகாப்பு படையினர் ஒருவரும் இல்லை.

ரயில் பெட்டியின் உதவியாளர், டிக்கெட் பரிசோதகரை தொடர்பு கொள்ள நாங்கள் முயன்றும் 20 நிமிடங்களுக்கு பின்பே அவர்கள் வந்தனர். அதன்பின் டெல்லி சென்று ரயில் நிலையத்தில் இறங்கியபின்புதான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

நான் அளித்த புகாரில், ரயிலில் எந்தவிதமான பாதுகாப்பு அதிகாரிகளும் இல்லை. ரயிலில் ஏசி பெட்டியில் கூட பயணிகள் பாதுகாப்பாக வரமுடியவில்லை என்றால், 2-ம் வகுப்பு பெட்டி, சாதாரண பெட்டியில் பயணிகளின்நிலை என்ன ஆகும் என்று தெரிவித்து இருக்கிறேன் “ எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x