Published : 18 Jan 2019 01:16 PM
Last Updated : 18 Jan 2019 01:16 PM

திருச்சியில் விண்வெளி ஆய்வு மையம்; இளம் விஞ்ஞானி திட்டம்: இஸ்ரோ தலைவர் அறிவிப்பு

இஸ்ரோ சார்பில் இளம் விஞ்ஞானி திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் திருச்சி உள்ளிட்ட 5 இடங்களில் இஸ்ரோவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் விண்வெளி ஆய்வு மையம் அமைக்கப்படும் என்றும் அதன் தலைவர் சிவன் அறிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை அன்று டெல்லியில் இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் இஸ்ரோ தலைவர் சிவன் பேசியதாவது:

''எதிர்கால இந்தியா அறிவியலில் இருந்து படைக்கப்படும். நாட்டின் நலனுக்காக நாம் இளைஞர்களைச் சீரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இதன் ஆரம்பகட்டமாக ஒரு திட்டத்தைச் செயல்படுத்த உள்ளோம். அதன்படி இஸ்ரோ தலைவர் எங்கு சென்றாலும் மாணவர்களைச் சந்திப்பார். அடுத்த திட்டம் இளம் விஞ்ஞானிகளுக்கானது. இதில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் 3 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

அதாவது 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் இருந்து தலா மூவர் தேர்வு செய்யப்படுவர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை இஸ்ரோவுக்கு அழைத்துச் செல்வோம். அவர்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். அதன் மூலம் சிறிய செயற்கைக்கோளை உருவாக்குவது குறித்து நேரடி அனுபவத்தைப் பெற முடியும். வெற்றிகரமாக உருவாக்கப்படும் செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படும்.

அந்த மாணவர்கள் இஸ்ரோவின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று, விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடலாம். ஒரு மாதம் இந்தப் பயிற்சி அளிக்கப்படும். இதற்கு சம்பந்தப்பட்ட மாநில அரசு உதவ வேண்டும்.  இது நாசா தனது ஆய்வகத்துக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதைப் போன்றது.

மூன்றாவதாக விண்ணில் ஏவப்பட்டு, வெற்றிகரமாக தன் வேலையை முடித்த செயற்கைக்கோளை அழிப்பதற்குப் பதிலாக, அதை மாணவர்களுக்கு சோதனைத் தளமாக மாற்ற முடிவு செய்துள்ளோம். இதன்மூலம் மாணவர்கள் செயற்கைக்கோள் குறித்து பிராக்டிகலாக, அதே நேரத்தில் இலவசமாகப் படிக்க முடியும்.

அத்துடன் இஸ்ரோவின் நேரடிக் கண்காணிப்பில் திரிபுரா, திருச்சி, நாக்பூர், இந்தூர் மற்றும் ரூர்கேலா ஆகிய பகுதிகளில் பயிற்சி மற்றும் வளர்ச்சி மேம்பாட்டு மையம் (விண்வெளி ஆய்வு மையம்) அமைக்கப்படும்''.

இவ்வாறு சிவன் தெரிவித்தார்.

 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x