Last Updated : 13 Jan, 2019 04:26 PM

 

Published : 13 Jan 2019 04:26 PM
Last Updated : 13 Jan 2019 04:26 PM

எஸ்சி,எஸ்டிக்கான இடஒதுக்கீட்டை நீக்குவதுதான் ஆர்எஸ்எஸ், பாஜகவின் திட்டம்: ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு

எஸ்.சி., எஸ்.டி. சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை ஒட்டுமொத்தமாக நீக்குவதுதான் ஆர்எஸ்எஸ், பாஜகவின் திட்டமாகும் என்று குஜராத் சுயேட்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி குற்றம்சாட்டினார்.

பொருளாதார ரீதியாகப் பின்தங்கி இருக்கும் உயர்சாதி ஏழைகளுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துவிட்டநிலையில் அது சட்டமாகியுள்ளது.

இந்நிலையில், கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் குஜராத் சுயேட்சை எம்எல்ஏவும், தலித் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

நாட்டில் எஸ்.சி. எஸ்.டி. சமூகத்தினருக்கும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கும் வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை முற்றிலும் நீக்குவதற்கான முதல்முயற்சியாகவே, உயர் சாதி ஏழைகளுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளதாக நினைக்கிறேன். இது எனக்கு மிகவும் கவலையளிக்கிறது.

அரசமைப்புச்சட்டத்தை தகர்த்து, சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுமுறையை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் ஆர்எஸ்எஸ், பாஜகவின் நீண்டகால நோக்கம், கோரிக்கையாகும்.

நாட்டில் சாதிமுறையிலான இடஒதிக்கீடு முறை கொண்டுவரப்பட்டதே சமூகத்தில், கல்வியில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான். வறுமையையும், ஏழ்மையையும் ஒழிப்பதற்காக அல்ல.

மற்ற சமூகத்தில் உள்ள ஏழை மக்களுக்குக் கிடைக்கும் சலுகைகள், உதவிகள் போன்றவற்றை நாங்கள் தடுக்கவில்லை, தடைசெய்யவில்லை. ஆனால், ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டின் மூலம் ஏழ்மை ஒழிக்கப்படாது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏழ்மை ஒழியும் என்றால், எஸ்சி, எஸ்டி, ஓபிசி ஆகிய பிரிவினரில் சமூக, கல்வி ரீதியாகப் பிற்படுத்தப்பட்டு இருக்கும் மக்களுக்கும் பிரிதிநிதித்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியும், அகிலேஷ் யாதவும் சேர்ந்து அமைத்துள்ள கூட்டணிக்கு வாழ்த்துக்கள். மற்ற எதிர்க்கட்சிகளும் இந்தக் கூட்டணியை சமிக்கையாக எடுத்துக்கொண்டு ஒன்று சேர்ந்து பாஜகவுக்கு எதிரான அணியைத் திரட்ட வேண்டும்

இவ்வாறு மேவானி தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x