Published : 09 Jan 2019 08:32 AM
Last Updated : 09 Jan 2019 08:32 AM

டீக்கடைக்கு ஓடி வந்து தந்தைக்கு உதவி செய்வேன்: பிரதமர் நரேந்திர மோடியின் மலரும் நினைவுகள்

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு ‘ஹியூமன்ஸ் ஆப் பாம்பே' என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பினர் தங்களது ‘பேஸ்புக்' பக்கத்தில் பல்வேறு தரப்பு மக்களின் நிஜ கதைகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் பிரதமர் நரேந்திர மோடி ‘ஹியூமன்ஸ் ஆப் பாம்பே' குழுவினரிடம் தனது வாழ்வின் முக்கிய நிகழ்வுகளைப் பகிர்ந்துள்ளார். பிரதமரின் மலரும் நினைவுகள், 5 பாகங்களாக வெளியிடப்பட உள்ளன. இதில் முதல் பாகம் ‘ஹியூமன்ஸ் ஆப் பாம்பே'வின் ‘பேஸ்புக்' பக்கத்தில் அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:எங்களுடைய வீடு 40-க்கு12 அடி கொண்ட மிகச் சிறிய வீடு. அதில் 8 பேர் வசித்தோம். காலையில் 5 மணிக்கு எழுந்துவிடுவோம். எனது தாயார் அதிகாலையில் பிள்ளைகளின் நலனுக்காக சிறப்பு பிரார்த்தனைகளை செய்வார். நான் அல்லது எனது சகோதரர், அம்மாவுக்கு துணையாக தீபத்தட்டினை ஏந்துவோம். எனது தாயாருக்கு சில சிறப்பு மருத்துவ முறைகள் தெரியும். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுடன் ஏராளமான தாய்மார்கள் நாள்தோறும் எங்கள் வீட்டின் வாசலில் காத்திருந்து எனது தாயாரின் ஆசியைப் பெற்றுச் செல்வார்கள்.

பொழுது விடிந்ததும் ரயில் நிலையத்தில் உள்ள தந்தையின் டீ கடையை நான் திறந்து, கடையை சுத்தம் செய்வேன். அதன்பிறகே பள்ளிக்குச் செல்வேன். பள்ளி முடிந்ததும் மீண்டும் டீக் கடைக்கு ஓடி வந்து தந்தைக்கு உதவி செய்வேன். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கடைக்கு வருவார்கள். அவர்களுக்கு டீ விநியோகம் செய்வேன். அவர்கள் கூறும் கதைகளை ஆர்வமாகக் கேட்பேன். அப்படித்தான் இந்தி பேச கற்றுக் கொண்டேன். சில வியாபாரிகள் பாம்பே குறித்துப் பேசுவார்கள். அந்த நகரை நான் பார்ப்பேன் என்று கனவு கண்டுள்ளேன்.

நூலகத்துக்குச் சென்று கையில் கிடைக்கும் அனைத்து புத்தகங்களையும் படிப்பேன். எனக்கு 8 வயதிருக்கும்போது முதல்முறையாக ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் கலந்து கொண்டேன். 9 வயது முதல் மக்களுக்காக சேவையாற்ற தொடங்கிவிட்டேன். குஜராத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக எனது நண்பர்களுடன் சேர்ந்து உணவு கூடம் திறந்து அவர்களின் பசியாற்றினோம். கடவுள் எல்லோரையும் ஒரே மாதிரியாகத்தான் படைத்தார். எந்த குடும்பத்தில் பிறந்தோம் என்பது முக்கியமில்லை. என்னால் சாதிக்க முடியும் என்ற எண்ணம் ஏழு வயதிலேயே எனக்குள் ஏற்பட்டது. சிறுவயதில் வசதியாக வாழவில்லை. போதுமான வசதிகள்கிடையாது. ஆனால் எனது சிறிய உலகில் நான் மகிழ்ச்சியாக வாழ்ந்தேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x