Published : 03 Jan 2019 08:55 AM
Last Updated : 03 Jan 2019 08:55 AM

பிரதமர் மோடிக்கு 4 கேள்விகள்: ரஃபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி காட்டம்

ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தம் குறித்து மக்களவையில் நேற்று பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கடுமையாகச் சாடியுள்ள நிலையில், இரவு தனது ட்விட்டர் பக்கத்தில் 4 கேள்விகளை முன்வைத்துள்ளார்.

ரஃபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரம் குறித்து மக்களவையில் நேற்று நடந்த விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது, ரஃபேல் விவகாரத்தில் தனது கேள்விகளை எதிர்கொள்ளத் துணிச்சல் இல்லாமல் அறையில் பதுங்கி இருக்கிறார் பிரதமர் மோடி. பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிமுக எம்.பி.க்கள் பின்னால் ஒளிந்திருக்கிறார் என்று கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

மேலும், கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் பேசியது தொடர்பான ஆடியோ குறித்தும் ராகுல் காந்தி பிரச்சினையைக் கிளப்பினார். கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரைப் பார்த்து பிரதமர் மோடி ஏன் பயப்படுகிறார் என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு தனது ட்விட்டர் பக்கத்தில் ரஃபேல் போர் விமானக் கொள்முதல் தொடர்பாக 4 கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில் அவர் கூறுகையில்,

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக நாளை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடிக்குத் திறந்த புத்தகத் தேர்வு நடத்தப்படுகிறது. கேள்விகள் முன்கூட்டியே கொடுக்கப்பட்டுள்ளன.

1.     126 ரஃபேல் போர் விமானங்கள் தேவைப்பட்ட நிலையில், ஏன் 36 விமானங்களாகக் குறைக்கப்பட்டது?

2.     ரஃபேல் போர் விமானம் ஒன்றில் விலை ரூ.560 கோடியாக முதலில் நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில் பாஜக அரசு ஒப்பந்தத்தில் ஒரு விமானத்தின் விலை ரூ.1,600 கோடியாக மாற்றப்பட்டது ஏன்?

4 இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிட்(எச்ஏஎல்) நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் பின்னர் ஏன் ஏஏ(அனில்அம்பானி) நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது

இந்தக் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளிப்பாரா?

இவ்வாறு ராகுல் காந்தி பதிவிட்டிருந்தார்.

இதற்குப் பதில் அளித்து பாதுகாப்புத்துறை நிர்மலா சீதாராமன் ட்விட்டர் பக்கத்தில், “ பள்ளிக்கூட வகுப்பறையில் தோல்வி அடைந்த மாணவர், வெளியே வந்து சவால்விடுகிறார்” எனத் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதில் அளித்து ராகுல் காந்தி மீண்டும் ட்விட் செய்தார். அதில் அவர் கூறுகையில், “ நான் 3-வது கேள்வியைப் பதிவிடவில்லை. ஏனென்றால், மக்களவை சபாநாயகர், கோவா ஆடியோ டேப் குறித்து பேசக்கூடாது எனத் தெரிவித்தார். ஆனால், 3-வது கேள்வி என்பது ரஃபேல் விவகாரத்தில் மிகவும் சிக்கலான கேள்வி.

மோடிஜி, தயவு செய்து கூறுங்கள், ரஃபேல் விமானக் கொள்முதல் தொடர்பான ஆவணங்களை ஏன் பாரிக்கர் தனது படுக்கை அறையில் வைத்துள்ளார். அதில் என்ன இருக்கிறது? “ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x