Last Updated : 27 Dec, 2018 05:58 PM

 

Published : 27 Dec 2018 05:58 PM
Last Updated : 27 Dec 2018 05:58 PM

விவசாயக் கடன் தள்ளுபடி விவகாரத்தில் விவசாயிகளை தவறான முறையில் காங்கிரஸ் வழிநடத்துகிறது: பிரதமர் மோடி கடும் விமர்சனம்

கடன் தள்ளுபடி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி விவசாயிகளை தவறாக வழிநடத்தி அவர்களை முட்டாள்களாக்குகின்றது என்று பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாகச் சாடினார்.

 

இமாச்சலத்தில் ஜெய் ராம் தாக்கூர் தலைமை ஓராண்டு ஆட்சியைக் கொண்டாடும் நிகழ்ச்சியில் தரம்சலாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஒரு ரேங்க், ஒரு பென்ஷன் திட்டத்திலும் முன்னாள் ராணுவ வீரர்களைத் தவறாக காங்கிரஸ் வழிநடத்தியது என்று பிரதமர் சாடினார்.

 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாடுமுழுதும் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யாமல்  பிரதமர் மோடியை ஓய்வு எடுக்க விடமாட்டோம் என்று பேசியதற்கு பதில் அளிக்கும் விதமாக பிரதமர் மோடி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

 

மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர்,  ராஜஸ்தான் மாநிலங்களில் சமீபத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த காங்கிரஸ் அங்கு உடனடியாக விவசாயக் கடன் திட்டங்களை அறிவித்தது.

 

இந்நிலையில் பிரதமர் மோடி பேசியதன் சுருக்கம் வருமாறு:

 

2009-ல் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் ரூ.60,000 கோடி விவசாயக்கடன்களை மட்டுமே தள்ளுபடி செய்தது, ஆனால் ரூ.6 லட்சம் கோடி விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அது வாக்குறுதி அளித்தது.

 

சிஏஜி அறிக்கையில் காங்கிரஸ் அரசின் விவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் நடைமுறையில் விவசாயிகள் அல்லாத லட்சக்கணக்கானோருக்குச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பஞ்சாப், ஹரியாணா தேர்தல்களுக்கு முன்பும் காங்கிரச் அரசு இதே போன்று விவசாயக் கடன் தள்ளுபடி வாக்குறுதி அளித்தது, ஆனால் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

 

பஞ்சாப் விவசாயிகளுக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை என்பதோடு கர்நாடகாவில் 800 விவசாயிகளுக்கு அடையாள ரொக்கம் மட்டும் அளிக்கப்பட்டது.

 

இப்படியாக காங்கிரஸ் கட்சி தனது கடன் தள்ளுபடி விவகாரத்தில் மக்களை முட்டாள்களாக்கி வருகிறது.  முந்தைய மன்மோகன் சிங் அரசும் ஒரு ரேங்க், ஒரு பென்ஷன் திட்டத்திற்குக் குறைந்த தொகையை ஒதுக்கி தேசத்தை தவறான புரிதலுக்கு இட்டுச் சென்றது.

 

ஆனால் எங்கள் அரசு முன்னாள் ராணுவ வீரர்களுக்கு உண்மையான அர்த்தத்தில் திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. முந்தைய அரசின் பென்ஷன் திட்டங்களில் போலி பயனாளர்கள் தொடர்பாக சுமார் ரூ.90,000 கோடி ஊழல்கள் நடந்துள்ளது.  இதனை பாஜக அரசு பதவிக்கு வந்தவுடன் அம்பலப்படுத்தியது.

 

தேசத்தின் காவலாளி ஊழல்வாதிகளை சும்மா விடத் தயாராக இல்லை. 

 

இமாச்சலத்தில் சுமார் ரூ.26,000 கோடி வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன, பல்வேறு துறைகளில் இது நடந்து வருகிறது. இமாச்சலம் எல்லையில் உயிர்த்தியாகம் செய்யக்கூடிய தைரியமான, வீரத் திருமகன்களைக் கொண்ட மாநிலமாகும்.

 

இமாச்சலம் எனக்கு வீடு போன்றது, இங்கு கட்சியின் அமைப்புசார்ந்த பணியில் நான் பல ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறேன்.

 

இவ்வாறு பேசிய பிரதமர் மோடி, இமாச்சலத்தில் பாஜக அரசின் சாதனைகள் அடங்கிய சிறு பிரசுரம் ஒன்றையும் வெளியிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x