Published : 31 Dec 2018 01:03 PM
Last Updated : 31 Dec 2018 01:03 PM

விநாயகரின் படம் பதித்த காலணிகள்: பிரபல நிறுவனத்துக்கு எதிராகக் குவியும் கண்டனங்கள்

விநாயகரின் படம் பதித்த காலணிகள் மற்றும் பெண்களின் டி-ஷர்ட்டுகளைத் தயாரித்துள்ள பிரபல நிறுவனத்துக்கு எதிராகக் கண்டனங்கள் குவிந்துவருகின்றன.

அமெரிக்காவில், ஹவாயைச் சேர்ந்த பிரபல நிறுவனமான மவி வோக் ( Maui Woke), விநாயகரின் படம் பதித்த காலணிகள் மற்றும் டி-ஷர்ட்டுகளை விற்பனைக்கு வைத்தது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான காலணிகள், ஷூக்கள், டி-ஷர்ட்டுகள்  ஆகியவற்றில் விநாயகரின் உருவத்தைப் பதித்து சர்ச்சையில் சிக்கியுள்ள மவி வோக், பிரபல ஆன்லைன் நிறுவனமாகும்.

விநாயகர் உருவம் பதித்த காலணிகள், பெண்கள் டி-ஷர்ட்டுகள், லெக்கின்ஸ் ஆகியவற்றின் படங்கள் அந்நிறுவனத்தின் ஆன்லைன் பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருந்தன. இந்தப் பொருட்களுக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை விலை நிர்ணயிக்கப்பட்டது. இது அமெரிக்க வாழ் இந்துக்கள் மத்தியில் கடுமையான சர்ச்சைகளைக் கிளப்பியது.

இதுகுறித்து இந்து செய்தித் தொடர்பாளர் ராஜன் சேத் கூறும்போது, ''கடவுளின் உருவத்தைக் காலணியில் பதித்திருப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயல். கோயில்களிலும் வீட்டின் பூஜை அறைகளிலும் வழிபடப்படும் விநாயகரின் உருவத்தைக் காலணியில் பதித்திருப்பது எங்களின் உணர்வைப் புண்படுத்துகிறது.

உலகின் மூத்த மற்றும் மூன்றாவது பெரிய மதம் இந்து மதம். சுமார் 110 கோடிக்கும் மேற்பட்ட இந்து மதத்தினர் உலகில் உள்ளனர். இதனால்  மவி வோக் நிறுவனம், தனது தயாரிப்புகளை திரும்பப் பெற வேண்டும், அத்துடன் மன்னிப்பும் கேட்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார். 

இந்தச் செய்தியை ’ஹவாய்ஃப்ரீபிரஸ்’ என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x