Last Updated : 23 Dec, 2018 03:19 PM

 

Published : 23 Dec 2018 03:19 PM
Last Updated : 23 Dec 2018 03:19 PM

நோயாளியை கித்தார் இசை மீட்ட கூறி மூளை அறுவை சிகிச்சை செய்து பெங்களூரு மருத்துவர்கள் சாதனை

நோயாளியை சுயநினைவுடன் கித்தார் இசைக்கருவியை மீட்டக் கோரி, அவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்து பெங்களூரு மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் அபிஷேக் பிரசாத். படித்து முடித்து மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிய அபிஷேக்குக்கு இசை மீதான காதலால் வேலையை உதறி முழுநேர கித்தார் இசைக் கலைஞரானார்.

லட்சக்கணக்கில் ஊதியம் பெற்றிருந்த தனது வேலையை உதவி கித்தார் இசைக்கலைஞராக கடந்த 2012-ம் ஆண்டு முதல் அபிஷேக் மாறினார். இந்நிலையில், இசைக் கலைஞர்களில் சிலருக்கு வரும் நரம்பு, தசைப்பின்னல் பிரச்சினை, அதாவது 'செயல்இழப்பு' பிரச்சினை அபிஷேக்கின் இடது கை விரல்களில் ஏற்பட்டது. இதனால், கித்தார் இசைக்கருவியை முறையாக வாசிக்க முடியாமல் கடந்த காலங்களில் சிரமப்பட்டார்.

இதையடுத்து, அபிஷேக்கை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மூளையில் அறுவை சிகிச்சை செய்தால், இடது கை விரல்கள் செயல்பாட்டுக்கு வரும், 3 விரல்கள் செயல்பாட்டுக்கு வந்துவிடும். கை விரல்களுக்கும் மூளைக்கும் இடையிலான தொடர்பை சரிசெய்துவிடமுடியும் என்று மருத்துவர்கள் நம்பினர்.

இதையடுத்து பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை அபிஷேக்குக்கு மூளை அறுவை சிகிச்சை நடந்தது. 7 மணிநேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சையின் போது, அபிஷேக் முழு சுயநினைவுடன் இருந்தார்.

அபிஷேக்கை கித்தார் மீட்டச் சொல்லி அவரின் கை விரல்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளையும்,  மூளையில் எந்த இடத்தில் இந்த பிரச்சினை உருவானது என்று கண்டுபிடித்து அதை  அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் சரி செய்துள்ளனர்.

தற்போது அனைவரையும் போல் அபிஷேக் தனது இடது கை விரல்கள் அனைத்தையும் இயக்கும் தன்மையை பெற்றுள்ளார். இந்த அறுவை சிகிச்சையை நரம்பியல் அறுவைசிகிச்சை மருத்துவர் சரத் சீனிவாசன் தலைமையிலான குழு செய்து சாதித்துள்ளனர்.

இதுகுறித்து அபிஷேக் பிரசாத் கூறுகையில், “ ஆப்ரேஷன் தியேட்டருக்கு வரும் போது கித்தாரை எடுத்துவர வேண்டியது அவசியம் என்று டாக்டர்கள் என்னிடம் தெரிவித்தனர். அதன்படி கித்தாரை எடுத்துச் சென்றேன். அறுவை சிகிச்சை செய்யும் போது நீ எப்படி உணர்கிறாய், இடது கை விரல்களை அசைக்க முடிகிறதா என்பது குறித்த என்னுடைய கருத்தை அறிய வேண்டும் என்பதற்காக கித்தாரை எடுத்துவந்து மீட்டச் சொன்னார்கள்.

அறுவை சிகிச்சை மூலம் என்னிடம் கேட்டு, சரி செய்தனர். இந்த அறுவை சிகிச்சை செய்தபோது, நான் முழு சுயநினைவுடன் இருந்தேன், மருத்துவர்கள் பேசியது, நான் உரையாடியது அனைத்தும் நினைவில் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x