Last Updated : 03 Dec, 2018 11:31 AM

 

Published : 03 Dec 2018 11:31 AM
Last Updated : 03 Dec 2018 11:31 AM

இந்தியா என் தகப்பன் நாடு; யாரும் என்னை வெளியேறச் சொல்ல முடியாது: உ.பி. முதல்வருக்கு ஓவைசி பதிலடி

இந்தியா என் தகப்பன் வாழ்ந்த நாடு, தகப்பன் நாடு. என்னை இங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேறச் சொல்ல யாராலும் முடியாது என்று எம்ஐஎம் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான அசாசுதீன் ஓவைசி, உ.பி. முதல்வருக்குப் பதிலடி கொடுத்தார்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தாந்தூர் பகுதியில் நேற்று முன்தினம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.அப்போது அவர் பேசுகையில், “ தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால், ஹைதராபாத் நிஜாம் தப்பி ஓடியதைப் போலவே, ஓவைசி எம்.பி.யும் ஹைதராபாத்தில் இருந்து தப்பி ஓடிவிடுவார் “ என்று பேசினார்.

உ.பி. முதல்வர் ஆதித்யநாத்தின் பேச்சுக்குப் பதிலடி கொடுத்து அசாசுதீன் ஓவைசி நேற்று ஹைதராபாத்தில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''இந்தியா என்பது என்னுடைய தகப்பன் நாடு. என் தந்தை வாழ்ந்த நாடு. இதை விட்டு நான் ஏன் போக வேண்டும். என்னை இங்கிருந்து யாரும் வலுக்கட்டாயமாக வெளியேற்ற முடியாது.

உத்தரப் பிரதேச முதல்வர் வரலாறு அறியாமல் பேசுகிறார். ஹைதராபாத் நிஜாம் ஹைதராபாத்தை விட்டு ஓடிப்போகவில்லை. அவர் கடைசிவரை ராஜாவாகவே வாழ்ந்தவர். சீனப் போர் ஏற்பட்டபோது, நாட்டுக்காகத் தங்கத்தை தானமாக வழங்கியவர் ஹைதராபாத் நிஜாம்.

உ.பி. முதல்வர் போன்று சிலர் விடுக்கும் மிரட்டல்களுக்கும், தவறான பரப்புரைகளுக்கும் நான் அஞ்சமாட்டேன். இந்தப் பேச்சை பேசியது மட்டும்தான் யோகி ஆதித்யநாத். ஆனால், அவரின் மனநிலை அனைத்தும் பிரதமர் மோடியின் மனநிலை. ஒருமாநிலத்தில் முதல்வராக உயர்ந்த பதவியில் இருப்பவர், அதன் கண்ணியத்தைக் காக்கும் வகையில் பேச வேண்டும்.

முதலில் உ.பி. முதல்வர் தன்னுடைய தொகுதியை நன்றாகப் பராமரிக்கிறாரா? அவருடைய தொகுதியில் இருக்கும் குழந்தைகள் மருத்துவமனையில்தான் 150 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். முதலில் அங்கு சென்று பராமரிப்புகளைச் செய்யட்டும். நாங்கள் இனிமேல் ஆயிரம் தலைமுறைகளாக வாழ்வோம்''.

இவ்வாறு ஓவைசி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x