Published : 07 Dec 2018 11:33 AM
Last Updated : 07 Dec 2018 11:33 AM

கும்பலின் வெறிச்செயலில் கொல்லப்பட்ட உ.பி. இன்ஸ்பெக்டர்  ‘இந்து மத விரோதியா?’: உள்ளூர் பாஜக தலைவர்கள் எழுதிய கடிதம் அம்பலம்

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷெஹரில் பசுவதை தொடர்பாக எழுந்த வன்முறையில் கும்பல் வெறிச்செயலில் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் இந்து மத விவகாரங்களுக்கு பெரிய இடையூறாக இருக்கிறார், அவர் இந்து மத விரோதி என்பதாக உள்ளூர் பாஜகவினர் 3 மாதங்களுக்கு முன்பாக எழுதிய கடிதம் ஒன்று அம்பலமாகியுள்ளது.

ஏற்கெனவே அன்று நடந்த வன்முறையைச் சாக்காக வைத்து இன்ஸ்பெக்டரை சில சமூகவிரோத சக்திகள் கொலை செய்ததாக ஐயங்கள் எழுந்த நிலையில் இந்தக் கடிதம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

2 பத்திகள் கொண்ட அந்தக் கடிதத்தில், “சுபோத் குமார் சிங் இந்து மதப் பண்டிகைகளுக்கு விரோதமாக கடும் இடையூறுகள் செய்கிறார், இதனால் இந்துக்கள் இவர் மீது கடும் கோபத்தில் உள்ளனர். ஆகவே இவரையும் இன்னொரு உள்ளூர் போலீஸையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் , இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை அவசியம் எடுக்க வேண்டும்” என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் இது அனைத்து உள்ளூர் பாஜக தொண்டர்களின் கோரிக்கையாகும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கடிதம் எழுதியது உண்மைதான் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்குக் கூறிய பாஜக புலந்த்ஷெஹர் நகர பொதுச் செயலாலர் சஞ்சய் ஷ்ரோதியா, “அவர் தேவையில்லாமல் மக்களுக்கு தண்டனை விதிக்கிறார்.  ஹெல்மெட் போடவில்லை எனில் அபராதம் கேட்கிறார், நகரத்துக்குள் ஹெல்மெட்டெல்லாம் தேவைஇல்லை, நெடுஞ்சாலையில்தான் ஹெல்மெட் போட வேண்டும், ஆனால் இவர் தொந்தரவு கொடுத்தார். ஆனால் அவர் நாங்கள் சொல்வதைக் கேட்பதில்லை” என்றார்.

இந்திய மோட்டார் வாகனச்சட்டப்படி இரு சக்கரவாகனம் வைத்திருப்பவர்கள் சாலையில் வண்டியில் செல்லும்போது ஹெல்மெட் அணிவது அவசியம், என்பது கூடத் தெரியாத ஒரு பாஜக பிரமுகர் அங்கு பொதுச்செயலாளராக இருந்து வருகிறார்.

ஷ்ரோதியா மேலும் சுபொது சிங் மீது வைத்தக் குற்றச்சாட்டு, “இந்து மத நிகழ்ச்சிகளுக்கு இடையூறு விளைவித்தார்.  இது இந்து சமாஜத்தினருக்கு வெறுப்பு அளித்தது. அதனால்தன இவரை இடமாற்றம் செய்யுமாறு உள்ளூர் எம்.பி.க்கு கடிதம் எழுதினோம்” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x