Last Updated : 17 Dec, 2018 11:53 AM

 

Published : 17 Dec 2018 11:53 AM
Last Updated : 17 Dec 2018 11:53 AM

உடல்நலிந்த நிலையில் பணி செய்யும் பாரிக்கர்; மனிதநேயமற்ற பாஜக - எதிர்க்கட்சிகள் விமர்சனம்

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஞாயிறன்று அலுவல் நிமித்தமாக வந்தார். அவருடன் 2 மருத்துவர்களும் இருந்தனர்.

மூக்கில் டியூபுடன் கைத்தாங்கலாக அழைத்துவரப்பட்டார். அவரது தோற்றம் பரிதாபமாக இருந்தது. இதனை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் சுட்டிக்காட்டியுள்ளன.கோவா மாநிலம் பாஞ்சிம் பகுதியில் ஜூவாரி நதியின் குறுக்கே கட்டப்படும் பாலப்பணிகளை அவர் பார்வையிட்டார்.

63 வயதான மனோகர் பாரிக்கர் கடந்த அக்டோபர் 14-ல் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பின்னர் வீட்டைவிட்டு அவர் பொது இடத்துக்கு அலுவல் நிமித்தமாக வந்துள்ளது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மனோகர் பாரிக்கர் மேம்பாலத்தை மேற்பார்வையிட்டது குறித்து அதிகாரிகள் கூறும்போது, "முதல்வர் காரில் வந்தார். கோவா கட்டுமானக் கழகமும் லார்சன் அண்ட் டூர்போ நிறுவனமும் இணைந்து இந்த கட்டுமானத்தை மேற்கொண்டுள்ள மேம்பால அமைக்கும் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரித்தார். அவருடன் இரண்டு மருத்துவர்களும் வந்திருந்தனர்" என்றார்.

மனோகர் பாரிக்கர் உடல்நிலை குன்றிய நிலையில் தனது அலுவல்களை மேற்கொண்ட புகைப்படம் இணையதளங்களில் வெளியானது, இதனை சுட்டிக் காட்டிய ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, "அவரது மூக்கில் ட்யூப் செலுத்தப்பட்டுள்ளது. இத்தகைய நிலையில் அவரை வேலை செய்ய சொல்லி அதை புகைப்படமாக எடுத்துப் பகிர்வது மனிதநேயமற்றது. அவரை ஓய்வு எடுக்க ஏன் அனுமதிக்கக்கூடாது. இபோதும்கூட ஏன் அவருக்கு அழுத்தம் தரவேண்டும்?" என்று வினவியுள்ளார்.

கடந்த 9 மாதங்களாக மனோகர் பாரிக்கர் கோவா, மும்பை, டெல்லி, நியூயார்க் என பல்வேறு நகரங்களில் மருத்துவ சிகிச்சைக்கு சென்று வந்தார்.  நீண்ட காலமாக அவர் பணியாற்றும் நிலையில் இல்லாததால் பணிகள் தேக்கமடைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி பதிவு செய்த ட்வீட்டில், "அவரது மூக்கில் ட்யூப் செலுத்தப்பட்டுள்ளதா? ஒரு மனிதர் நோய் வாய்ப்பட்டிருக்கும்போது பணி செய்ய சொல்லும் அளவுக்கு ஒரு கட்சிக்கு அதிகாரப் பசி இருக்குமா? பாஜக, பதவி அதிகாரத்துக்காக எதையும் விட்டுவைக்காது. முதல்வர் அவர்களே உடல்நலனை கவனித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் உங்கள் கட்சி உங்களை கவனிக்காது" எனப் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x