Last Updated : 06 Sep, 2014 12:07 PM

 

Published : 06 Sep 2014 12:07 PM
Last Updated : 06 Sep 2014 12:07 PM

கர்நாடக முதல்வருக்கு நெருக்கடி முற்றுகிறது: துணை முதல்வர், அமைச்சர் பதவி கேட்டு கட்சியினர் போர்க்கொடி

கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களில் சிலர் தங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கக் கோரியும் மூத்த தலைவர்கள் சிலர் தங்களுக்கு துணை முதல்வர் பதவி வழங்கக் கோரியும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் கர்நாடக‌ முதல்வர் சித்தராமையாவிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சித்தராமையா தங்களது கோரிக்கையை ஏற்காததால் டெல்லியில் முகாமிட்டுள்ள கர்நாடக காங்கிரஸார் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியையும் துணைத் தலைவர் ராகுல் காந்தியையும் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில் பாஜகவின் கோட்டையான பெல்லாரி, சிக்கோடி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிப் பெற்றது.

கர்நாடகத்தில் காங்கிரஸின் தொடர் வெற்றிக்கு மாநிலத் தலைவர் பரமேஷ்வர்தான் காரணம். ஆதலால் அவருக்கு கண்டிப்பாக துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என 30-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சோனியா காந்திக்கு கடந்த வாரம் கடிதம் எழுதினர்.

இதனிடையே கடந்த புதன்கிழமை டெல்லிக்கு சென்ற பரமேஷ்வர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும்,மூத்த காங்கிரஸ் தலைவர் அகமது பட்டேலையும் சந்தித்துப் பேசினார்.

இதைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் சித்தராமையா கடந்த வியாழக்கிழமை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது, “பரமேஷ்வரின் துணை முதல்வர் கோரிக்கையை ஏற்கக் கூடாது. அவருக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டால் டி.பி.ஜெயசந்திரா,ஜார்ஜ் போன்ற மூத்த காங்கிரஸ் தலைவர்களும் துணை முதல்வர் பதவி கேட்பார்கள். எனவே முந்தைய பாஜக ஆட்சியைப் போல பல அதிகார மையங்கள் உருவாகி, ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும். எனவே துணை முதல்வர் பதவி வேண்டாம். தேவைப்பட்டால் அமைச்சரவையை விரிவாக்கிக் கொள்ளலாம்'' எனக்கூறியதாக தெரிகிறது.

4 புதிய அமைச்சர்கள்

காங்கிரஸ் மேலிடமும் முதல்வர் சித்தராமையாவும் அமைச்சரவையில் புதியதாக 4 பேரை இணைத்துக்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளன. அந்த பதவியை கைப்பற்ற 40-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் டெல்லியில் முகாமிட்டு அமைச்சர் பதவியை பெறுவதற்கான காய் நகர்த்தல்களை தொடங்கியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x