Last Updated : 27 Dec, 2018 12:38 PM

 

Published : 27 Dec 2018 12:38 PM
Last Updated : 27 Dec 2018 12:38 PM

ராஜஸ்தான் அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு: 9 இலாகாவை வைத்துக்கொண்ட முதல்வர் அசோக் கெலாட்

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான புதிய அமைச்சரவை பொறுப்பேற்ற நிலையில், இன்று அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. முதல்வர் கெலாட்டுக்கு 9 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

ராஜஸ்தானில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றி, சமீபத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதல்வராக மூத்த தலைவர் அசோக் கெலாட்டும், துணை முதல்வராக சச்சின் பைலட்டும் தேர்வு செய்யப்பட்டு கடந்த 17-ம் தேதி பதவி ஏற்றனர். கடந்த திங்கள்கிழமை 23 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை பொறுப்பேற்றது. ஆனால் யாருக்கும் துறைகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்தது.

முதல்வர் அசோக் கெலாட் ஆதரவு அமைச்சர்கள், துணை முதல்வர் சச்சின் பைலட் ஆதரவு அமைச்சர்கள் இருந்ததால், யாருக்கு எந்தத் துறையை ஒதுக்குவது என்ற சிக்கல் இருந்தது. இது தொடர்பாக, அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகியோர் நேற்று டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்து துறைகள் ஒதுக்கீடு செய்வது குறித்து ஆலோசனை நடத்தினர்.

அதன்பின், எந்தெந்த அமைச்சர்களுக்கு என்ன துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த முறைப்படியான அறிவிப்பை அமைச்சரவைச் செயலாளர் இன்று வெளியிட்டார். அதில் முதல்வர் அசோக் கெலாட் வசம் முக்கியத் துறைகளான நிதித்துறை, உள்துறை, கலால்வரி, திட்டமிடுதல், பணியாளர் துறை, பொது நிர்வாகம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட 9 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கு பொதுப்பணிகள், கிராம மேம்பாடு, பஞ்சாயத் ராஜ், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புள்ளியியல் துறை ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டன.

பிடி காலாவுக்கு எரிசக்தி, சுகாதாரம், பொறியியல், நிலத்தடிநீர், கலை, கலாச்சாரம், தொல்லியல் துறையும், சாந்தி தாரிவாலுக்கு வீட்டு வசதி, சட்டம் மற்றும் சட்டப்பேரவை விவகாரத்துறையும் ஒதுக்கப்பட்டன.

வேளாண்மை, கால்நடை, மீன்வளத்துறை ஆகியவை லால் சந்த் கடாரியாவுக்கும், மருத்துவம், மக்கள் தொடர்புத் துறை ரகு சர்மாவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x