Last Updated : 25 Nov, 2018 08:54 AM

 

Published : 25 Nov 2018 08:54 AM
Last Updated : 25 Nov 2018 08:54 AM

கன்னட நடிகர் அம்பரீஷ் காலமானார்

கன்னட நடிகரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான அம்பரீஷ் உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 66

கன்னட நடிகர் அம்பரீஷ் வீட்டில் இருக்கும் போது, நேற்று இரவு 9 மணி அளவில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று நள்ளிரவு அவரின் உயிர் பிரிந்தது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “ வீட்டில் இருந்து நடிகர் அம்பரீஷை அழைத்து வரும்போது, சுயநினைவின்றி இருந்தார், அதன்பின் சுவாசம் இயல்புநிலைக்கு வருவதற்குத் தொடர்ந்து முயற்சிகள் செய்தோம். ஆனால், எந்தச் சிகிச்சையும் பலன் அளிக்காமல், அவரின் உயிர் இரவு 10.15 மணிக்குப் பிரிந்தது” எனத் தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்த அம்பரீஷ், பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார், சமீபத்தில் சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காகவும் சென்றிருந்தார்.

நடிகர் அம்பரீஷ்க்கு மனைவி (நடிகை) சுமலதா மற்றும் ஒரு மகன் உள்ளார். அம்பரீஷ், ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பராவார். இருவரும் 1978-இல் வெளியான "பிரியா' படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

கடந்த 1952-ம் ஆண்டு மே 29-ம் தேதி மாண்டியா மாவட்டம், தொட்டரசினகெரெவில் நடிகர் அம்பரீஷ் பிறந்தார். திரைப்படங்களில் வில்லன் நடிகராக அறிமுகமாகி அதன்பின் ஹீரோவாக வலம் வந்தார். இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

அரசியலிலும் நடிகர் அம்பரீஷ் தனி முத்திரை பதித்துள்ளார். எம்எல்ஏவாகவும், மக்களவை உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தார். ஜனதா தளம் கட்சியில் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, அதன்பின் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் அம்பரீஷ். மண்டியா தொகுதி எம்எல்ஏவாக வெற்றி பெற்று சித்தராமையா அமைச்சரவையில் 2013 முதல் 2016 வரை வீட்டுவசதி துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

கடந்த 2006-07-ம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை இணையமைச்சராக நடிகர் அம்பரீஷ் இருந்தார். காவேரி பிரச்சினை காரணமாக, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

நடிகர் அம்பரீஷ் மறைவுக்கு முதல்வர் எச்.டி.குமாரசாமி, முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் ஆழ்ந்த வருத்தமும், இரங்கலும் தெரிவித்துள்ளனர். அம்பரீஷ் இறந்த செய்தி அறிந்ததும், முதல்வர் குமாரசாமி, சித்தராமையா இருவரும் மருத்துவமனைக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x